Published : 07 Nov 2014 10:14 AM
Last Updated : 07 Nov 2014 10:14 AM
பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிறகு முதன்முறையாக நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். அப்போது தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில காவல் துறை தலைவர் அசோக் ஜெயின் தெரிவித்துள்ளார். பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும்.
இந்தப் பயணத்தின்போது, பட்ஜெட்டில் அறிவித்தபடி நெசவாளர்களுக்கான வர்த்தக வசதி மையம் கைவினைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். விசைத்தறி மையம் ஒன்றையும் திறந்து வைக்க உள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டத்தின் கீழ் ஜெயபூர் கிராமத்தை தத்தெடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
பிரதமரை வரவேற்பதற்காக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் சிங் இன்று வாரணாசிக்கு வர உள்ளார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவாரும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வார் என கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஓபி சாவ்பே தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக விளங்கும் வாரணாசி, புனிதத் தலமாகவும் விளங்குகிறது. ஆனாலும், அங்கு போதுமான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இந்நிலையில், இந்தத் தொகுதியில் போட்டியிட்ட மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால், வளர்ச்சிப் பணிகளை மோடி மேற்கொள்வார் இந்தத் தொகுதி மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரணாசிக்கு சென்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோடி வழிபட்டதுடன் கங்கை நதியில் புனித நீராடினார். அதன் பிறகு முதன்முறையாக இப்போதுதான் அந்த நகரத்துக்கு செல்கிறார்.
‘உலக தலைவர்களை சந்திக்க ஆர்வம்’
பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, ஆசியான், கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் ஜி-20 நாடுகள் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்கிறார்.
இதுகுறித்து மோடி நேற்று கூறியதாவது:
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவு மிகவும் ஆழமானது. மியான்மரில் நடைபெற உள்ள ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். அப்போது உலக தலைவர்களை சந்தித்துப் பேச ஆவலாக உள்ளேன். இந்த சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோல் ஆஸ்திரேலியா பயணத்தின்போது, அங்குள்ள முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளேன். மேலும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேச மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
ஜி-20 நாடுகள் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளேன். பொருளாதாரம், தீவிரவாதம் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அந்தத் தலைவர்களுடன் விவாதிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் என மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT