Published : 09 Dec 2013 11:40 AM
Last Updated : 09 Dec 2013 11:40 AM
காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரான டாக்டர் ஹர்ஷவர்தன் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் கடும் சர்ச்சைக்கு இடையே இவரை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவித்தது.
சிறுவயது முதல் ஆர்எஸ்எஸ் தொண்டரான ஹர்ஷவர்தன், 1993-ல் அரசியல் வாழ்வில் நுழைந்தார். டெல்லியின் பாரதிய ஜனதா கட்சிக்காக தொண்டாற்றி வந்தவருக்கு அதன் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட 1993-ல் முதன் முறையாக வாய்ப்பு கிடைத்தது.
அப்போது முதல் தொடர்ந்து அத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஹர்ஷவர்தன், தற்போது 5 ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தமுறை அவருக்கு இதுவரை கிடைக்காத அளவுக்கு 69,222 வாக்குகள் கிடைத்தன. இவருக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் வினோத்குமார் மோங்காவிற்கு 27,072 வாக்குகள் கிடைத்தன.
‘டாக்டர் சாஹப்’ என அன்புடன் அழைக்கப்படுபவரை பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ‘டெல்லியில் பாஜக ஆட்சியில் 1993 முதல் 1998 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் அம் மாநிலத்தின் போலியோவை பெரும்பாடு பட்டு ஒழித்தார்.
இதற்காக அவர் செயல்படுத்திய முறை தேசிய அளவில் முன்னு தாரணமாக இருந்தது. இதை மத்திய அரசும் தனது திட்டங்களில் அறிவித்துச் செயல்படுத்தியது.
பிறகு இதை ‘தி டேல் ஆஃப் டூ டிராப்ஸ்’ என்ற பெயரில் நூலாகவும் எழுதி வெளியிட்டார். 2003-ல் டெல்லி சட்டசபையில் தோல்வி அடைந்த பாஜகவை தொடர்ந்து பாடுபட்டு தூக்கி நிறுத்திய பெருமை டாக்டர் சாஹப்பையே சேரும்.’ எனக் கூறுகின்றனர்.
2003 முதல் 2008 வரை டெல்லி பாஜகவின் தலைவராக இருந்த ஹர்ஷவர்தன், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை கொண்டு வந்த முதல் மாநில அமைச்சராவார். இதையும், பல மாநிலங்கள் பின்பற்றிய பிறகு, மத்திய அரசும் 2002-ல் சட்டமாகக் கொண்டு வந்தது. இதை, உலக சுகாதர மையம் அங்கீகரித்து அவருக்கு 1998-ல் விருதளித்தது.
ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரிலான அமைப்பின் செயலாளராகவும் இருக்கும் ஹர்சவர்தன், அவரை பற்றிய ஆய்வுகளையும்சேகரித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT