Published : 26 Dec 2013 09:55 AM
Last Updated : 26 Dec 2013 09:55 AM
இளம்பெண்ணை குஜராத்தில் மட்டுமல்லாது, கர்நாடகத்திலும் வேவு பார்த்துள்ளனர் குஜராத் மாநில போலீஸார் என்றும், அது தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளையும் செய்தி இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இளம் பெண் ஒருவரின் தொலைபேசி உரையாடல்களை கண்காணிக்கும்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்த அமித் ஷா, போலீஸாருக்கு உத்தரவிட்டதாகவும், அது தொடர்பான ஆடியோ ஆதாரங்களையும் செய்தி இணையதளங்களான ‘கோப்ரா போஸ்ட், குலாய்ல்’ ஆகியவை வெளியிட்டன. அமித் ஷாவுக்கும், போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே நிகழ்ந்த 257 தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் அந்த பெண் குஜராத்தில் இருந்தபோது மட்டுமின்றி கர்நாடகத்துக்குச் சென்றபோதும் வேவு பார்க்கப்பட்டார் என்பதற்கான ஆதாரத்தை ‘குலாய்ல்’ இணையதளம் வெளியிட்டுள்ளது. குஜராத் போலீஸ் உயர் அதிகாரிகள் ஜி.எல்.சிங்கால், ஏ.கே.சர்மா ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த 39 தொலைபேசி உரையாடல் பதிவுகளை அந்த இணையதளம் இப்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:“குஜராத் காவல்துறை உயர்அதிகாரிகள் 2009-ம் ஆண்டு கர்நாடக காவல் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு அந்தப் பெண்ணின் தொலைபேசி உரையாடல்களை கண்காணிக்க வலியுறுத்தியுள்ளனர். அப்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது. முதல்வராக எடியூரப்பா இருந்தார்.
ஆனால், இந்த வேண்டுகோளை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. வேவு பார்க்கும்படி குஜராத் அரசு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இளைய அதிகாரி கையெழுத்திட்டிருந்தார். உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, உயர் அதிகாரிகளின் கையெழுத்து இருந்தால்தான் அதை ஏற்க முடியும் என்று கர்நாடக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில், குஜராத் உள்துறை அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு சட்டத்துக்கு புறம்பாக செல்போன் நிறுவனங்களை தொடர்புகொண்டு, அந்த பெண்ணின் தொலைபேசி உரையாடல்களை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளனர். இது இந்திய டெலிகிராப் சட்டம் 419 (ஏ)-யின்படி விதிமீறலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “இதுபோன்ற செய்திகளை வெளியிடும் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது. மோடியின் புகழைக் கெடுப்பதற்காக இதுபோன்ற செயல்களில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT