Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் திங்கள் கிழமை சந்தித்துப் பேசினார்.
பிஹாரில் காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கடந்த 2004 தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது இக்கூட்டணிக்கு 29 தொகுதிகள் கிடைத்தன. ஆனால், 2009 தேர்தலில் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் மட்டும் ஒதுக்குவோம் என்று லாலு கூறியதால் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறியது. இந்தக் கூட்டணி முறிவால் 3 கட்சிகளும் இழப்பை சந்தித்தன.
இந்நிலையில் பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், நரேந்திர மோடி விவகாரத்தில் பாஜகவுடன் தனது 17 வருடக் கூட்டணியை முறித்துக் கொண்டதால், அக்கட்சி காங்கிரஸுடன் கூட்டு சேரும் என்று கூறப்பட்டது. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விதித்த நிபந்தனைகளால் மீண்டும் லாலுவுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியது காங்கிரஸ். இந்தப் பேச்சுவார்த்தை கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு சிறைக்குச் சென்றதால் நின்றது. தண்டனை அடைந்தவருடன் கூட்டணி வேண்டாம் என்று ராகுல் கூறியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. என்றாலும் ஜாமீனில் வெளிவந்த மறுநாளே டெல்லியில் சோனியாவை சந்தித்தார் லாலு.
இதுகுறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள வட்டாரங் கள் கூறுகையில், “லாலு சிறைக்குச் சென்றதால் பீகாரில் யாதவ் மக்களின் அனுதாப வாக்குகள் அவர் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ளது. இதை ராகுலிடம் திக்விஜய் சிங் எடுத்துக்கூறி அவரை ஏற்றுக் கொள்ளச் செய்துவிட்டார்” என்றனர்.
பிஹாரில் லாலு தலைமை யிலான கூட்டணியில் பாஸ்வான் தவிர தேசியவாத காங்கிரஸ், சி.பி.ஐ. மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இணையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பிஹாரில் பலமான கூட்டணி அமைப்பது லாலுவின் திட்டமாகக் கருதப்படுகிறது.
லாலு தமக்கு 25 தொகுதிகளை வைத்துக்கொண்டு காங்கிரஸுக்கு 7, பாஸ்வானுக்கு 6 , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ. எம்.எல் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் அளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT