Published : 06 May 2017 07:10 PM
Last Updated : 06 May 2017 07:10 PM

தனியார் குளிர்பான ஆலைக்கு எதிராக தொடரும் போராட்டம்: பிளாச்சிமடை பிரச்சினைக்கு தீர்வுகாணுமா கேரள அரசு?

15 ஆண்டுகள் முடிந்து 16-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிளாச்சிமடை போராட்டம் கடந்த 13 நாட்களாக நடைபெற ஆரம்பித்துள்ளது. இந்த முறையாவது இதற்கு முழுமையான தீர்வு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது.

பாலக்காடு ஜில்லா, சிற்றூர் அருகே உள்ளது பிளாச்சி மடை. இக்கிராமத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு உலகளாவி உள்ள தனியார் குளிர்பான நிறுவனம் தொழிற்சாலையை அமைத்தது. குளிர்பானத்திற்கான தண்ணீருக்கு 10-க்கும் மேற்பட் ஆழ்துளைக் கிணறுகளை தோண்டியது. இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்ததோடு, இந்த ஆலை வெளியிடும் கழிவுகளால் சுற்றுவட்டார கிணறுகளில் நீர் மாசுபட்டது. வேளாண்மையும் பாழானது. இங்கு வசிக்கும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட் சமூகத்தை மக்களின் ஓயாத எதிர்ப்பும், போராட்டமும் தொழிற்சாலையை மூட வைத்தது.

உச்ச நீதிமன்றம் வரை சென்ற இப்பிரச்சினையில் குளிர்பான நிறுவனம் வெற்றியடைய முடியவில்லை என்றாலும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. ஆலை முன்பு பந்தல் போட்டு இரவு, பகல் பாராது தினம் ஒரு குழுவாக சத்தியாகிரகப் போராட்டங்களை நடத்தினர். இந்த தொழிற்சாலையை அடியோடு அகற்ற வேண்டும். சொறி, சிரங்கு மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாழ்பட்ட விவசாய நிலங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அதற்காக உண்மை அறியும் குழுவை கேரள அரசு அமைத்தது. அந்த குழு, இந்த நிறுவனத்தினால் ஏற்பட்டுள்ள இழப்புகள் ரூ. 216.26 கோடி என கணக்கிட்டு அறிக்கை அளித்தது.

இதன் மீது விவாதம் நடத்திய கேரள அமைச்சரவை இந்த தொகையை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் பெற்று, உரியவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அதற்கு தீர்ப்பாயம் அமைக்கவும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதற்கு ஏற்படவில்லை.

'இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியமே இல்லை. கேரள அரசே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இதற்கு வழிவகை செய்யலாம். அதை செய்யாமல் இருப்பதே மாறி, மாறி வரும் அரசாங்கத்தின் தன்மையாக இருக்கிறது. எனவே இதில் மாநில அரசே தீர்வு காண வேண்டும்!' எனக் கோரி போராட்டக்காரர்கள் பாலக்காடு ஆட்சியர் அலுவலகம் எதிரே கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

பிளாச்சிமடையில் 22.04.2002 அன்று தொடங்கிய இடைவிடாத சத்தியாகிரகப்போராட்டத்தை முன்வைத்து 15 ஆண்டுகள் கழிந்து 16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த அதே தினத்தில் இதற்காக தொடங்கிய இந்த மற்றொரு போராட்டம் கேரளத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும், முக்கியத்துவம் பெற்றுள்ளதாக உள்ளது. இந்திய அளவில் உள்ள 50க்கும் மேற்பட்ட பொதுநல, இயற்கை, சூழல் மற்றும் குறிப்பிட்ட கட்சி இயக்கங்கள் நாளொன்றுக்கு ஒரு இயக்கம் வீதம் இதில் பங்கெடுக்கின்றன.

(வேணுகோபால், கண்ணம்மாள்)

இதுகுறித்து போராட்ட பங்கெடுப்பில் இருந்த விழையோடி வேணுகோபால் தி இந்து செய்தியாளரிடம் கூறியதாவது.

''உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிற போராட்டமாகவே இது 15-ம் ஆண்டு முடிந்து 16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கேரள அரசாங்கம்தான் கண்டு கொள்ளாமலே உள்ளது. இப்போதும் கேரள சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது. அதில் பல்வேறு அரசியல் சமாச்சாரங்கள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதைப்பற்றி பேசத்தான் யாருக்குமே நேரம் இல்லை. வாய்ப்பும் இல்லை.

கேரளாவில் எல்டிஎப் சர்க்கார் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அந்த அணியினரிடம் நாங்கள் இந்த பிளாச்சி மடை விவகாரம் குறித்து மனு அளித்துள்ளோம். மக்களுக்கான இழப்பீடும், குளிர்பான நிறுவனம் அங்கேயிருந்து அப்புறப்படுத்தவும் மத்திய அரசை நாட வேண்டியதேயில்லை.

நம் சட்டப்பேரவையில் அதற்கொரு பில் பாஸ் செய்தால் போதும் என்று விளக்கியுள்ளோம். அதை அவர்களும் ஆமோதித்து தாங்கள் ஆட்சியமைக்கும்போது நிச்சயம் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றே வாக்குறுதி அளித்தனர். அவர்களின் ஆட்சி அமைந்த பின்பு அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்கள் சிலரையும் பார்த்து மனு அளித்து மீண்டும் நினைவுறுத்தி வலியுறுத்தினோம். அதற்குப்பிறகு 3 மாதங்களாகியும் எந்த அசைவும் இல்லை.

எனவேதான் கடைசியாக பிளாச்சி மடையில் மட்டுமல்லாது, ஆட்சியர் அலுவலகம் எதிரிலும் ஒரு காலவரையற்ற சமரம் (போராட்டம்) தொடங்குவதாக அறிவித்து அதையும் முன்கூட்டியே முதல்வர், சட்டத்துறை, நீர்பாசனத்துறை அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் மனுக்கள் மூலம் தெரிவித்தோம்.

இப்போது 13-வது நாளாக இந்த சமரமும் நடந்து கொண்டிருக்கிறது. நாளைய சமரத்திற்கு கோயமுத்தூரிலிருந்து எச்என்கேபி என்ற அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட உள்ளனர். இதுவரை 50 அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஒருநாள் பங்கேற்பதற்கு அனுமதி கொடுத்து பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் தொடரும்.

பிளாச்சிமடையில் 16 ஆண்டுகளாக சத்தியாகிரகம் நடக்கிற மாதிரி இங்கே தொடங்கப்பட்ட இந்த சமரமும் எத்தனை மாதங்கள், எத்தனை வருடங்கள் நடக்கும் என்பதெல்லாம் சொல்ல முடியாது. அது இந்த ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது. இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் எங்களின் கோரிக்கைகளை விலாவாரியாக பெற்றுச் சென்றுள்ளார்கள். அவர்கள் யாரும் இதுவரை சட்டப்பேரவையில் இதைப்பற்றி பேசவேயில்லை!'' என தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் இந்த தர்ணா போராட்டத்திற்கு தினமும் பிளாச்சிமடையில் குளிர்பானக் கம்பெனியால் பாதிக்கப்பட்ட மக்களும் பங்கேற்கின்றனர். அவர்களில் 90 வயதான கண்ணம்மாள் கூறும்போது, ''15 வருஷம் முன்னால இந்த போராட்டம் ஆரம்பிக்கிற நாள் முதலாக இதில் பங்கேற்கிறேன். ஒருநாள் கூட போராட்ட பந்தலுக்கு வராமல் இருந்ததில்லை. போராட்ட இடத்தை கூட்டி பெருக்கி தண்ணீர் தெளித்து ஒழுங்குபடுத்தி வைப்பதே நான்தான். ஆளுக்கு ஒருநாள் அங்கேயே அமர்ந்து சோறு சமைத்து பரிமாறுவோம். இன்றைக்கும் கூட பிளாச்சிமடை போராட்டப்பந்தல் இடத்தை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து போராட்டக்காரர்கள் அமர ஏற்பாடு செய்துவிட்டுத்தான் இங்கே கலெக்டர் ஆபீஸ் முன்னாடி உள்ள தர்ணாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.

எனக்கு மட்டுமல்ல; எங்களை போன்றவர்களுக்கு போராட்டமே வாழ்க்கை ஆகி விட்டது. அந்த அளவுக்கு எங்க நிலம் பாழ்பட்டு, நாங்களும் நோய்பட்டு, நிறைய பேர் செத்துப் போய் பலர் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான கூலியை அரசாங்கமும், அந்த கம்பெனியும் தராத வரை எங்கள் போராட்டம் ஓயவே ஓயாது!'' என உணர்ச்சி பொங்கிடப் பேசினார்.

மற்றொரு நிறுவனத்தின் சிக்கல்

பாலக்காடு ஜில்லாவில் பிளாச்சி மடையில் உள்ளது போலவே புதுசேரி பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமத்தில் ஒரு குளிர்பான நிறுவனம் அமைந்தது. அதுவும் நிலத்தடி நீரை உறிஞ்சி கழிவுகளை வெளியிட்டதில் அதற்கெதிராகவும் மக்கள் பொங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிளாச்சிமடை கம்பெனியை பொறுத்தவரை நிரந்தரமாகவே மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுசேரியில் உள்ள குளிர்பான நிறுவனத்திற்கு அப்படி எதுவும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லையாம்.

மாறாக தற்போது பாலக்காடு ஜில்லா முழுவதும் நிலவி வரும் வறட்சியின் காரணமாக வர்த்தக ரீதியில் எந்த ஒரு ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது கடந்த 5 மாதங்களாக அமலில் உள்ளது.

அந்த அடிப்படையில் அந்த புதுசேரி குளிர்பான நிறுவனம் தண்ணீர் எடுப்பது தற்காலிகமாக தடைபட்டுள்ளது. அதனால் அது இயங்காமல் உள்ளது. என்றாலும் பிளாச்சி மடை பாதிப்பு எவ்வளவு உள்ளதோ, அதே அளவு பாதிப்பு இந்த புதுசேரி குளிர்பான நிறுவனம் மூலமும் உள்ளது. எனவே அதற்கும் நிரந்தர தடை விதிக்க, நிறுவனத்தை அப்புறப்படுத்த போராட்டக்காரர்கள் கோரி வருகிறார்கள்.

அந்த கம்பெனி உள்ள தொகுதி மலம்புழா. அதன் தற்போதைய எம்.எல்.ஏ முன்னாள் கேரளா முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆவார். பிளாச்சிமடை பிரச்சினைக்காக சட்டப்பேரவையில் பேச 4 எம்.எல்.ஏக்கள் போராட்டக்காரர்களை சந்தித்து விஷயங்களை வாங்கி சென்றிருக்க, வி.எஸ் அச்சுதானந்தன் இதுகுறித்து எதுவுமே பேசாதிருப்பது போராட்டக்காரர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x