Published : 11 Feb 2014 06:01 PM
Last Updated : 11 Feb 2014 06:01 PM

6 காங்கிரஸ் எம்.பி.க்கள் கட்சியிலிருந்து நீக்கம்: தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடவடிக்கை

தெலங்கானா விவகாரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக சீமாந்திராவை சேர்ந்த 6 காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நடவடிக் கையின் மூலம் தெலங்கானா தனி மாநிலம் உருவாவதற்கு எதிராக செயல்படும் கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சோனியா காந்தி நடவடிக்கை

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி வெளியிட்ட செய்தி அறிக்கையில், “ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சப்பம் ஹரி, ஜி.வி.ஹர்ஷ குமார், வி.அருண் குமார், எல்.ராஜகோபால், ஆர்.சாம்பசிவ ராவ், ஏ.சாய்பிரதாப் ஆகிய 6 எம்.பி.க்களை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவை தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த 6 எம்.பி.க்களும் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த எம்.பி.க்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மான நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது சீமாந்திராவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளபோதும், அப்பகுதியை சேர்ந்த மற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து தெலங்கானா மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

சீமாந்திராவைச் சேர்ந்த எம்.பி. அனந்த வெங்கட்ராமி ரெட்டி கூறுகையில், “தெலங்கானா மசோதாவை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அந்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, எதிராக வாக்களிப்போம். அந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தோற்கடிப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதை நான் ஆதரிக்கவில்லை” என்றார்.

காங்கிரஸ் உறுதி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் கூறுகையில், “தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது” என்றார்.

இன்னும் ஓரிரு நாளில் தெலங்கானா தனி மாநில மசோதா (ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதலில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், இப்போது மக்களவையில் முதலில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு குடியரசுத் தலைவரும் தனது ஒப்புதலை அளித்து விட்டார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பாஜகவுடனும் காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x