Published : 04 Oct 2013 08:29 AM Last Updated : 04 Oct 2013 08:29 AM
ஊழல் செய்வோர் இனி அஞ்சுவார்கள் - வெங்கய்ய நாயுடு கருத்து
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு, மற்றொரு முன்னாள் முதல்வரான ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் ஊழல் செய்பவர்கள் இனி அஞ்சி ஓடுவார்கள் என்றார் பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு.
பாஜக எம்.பி.யான இவர் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி வருமாறு:
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கிய தண்டனையானது, அரசியல்வாதிகளுக்கு ஊழல் புரியும் துணிச்சலைக் கொடுக்காது. இனி அவர்களை அஞ்சி ஓடவைக்கும். லாலுவுக்கும் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கும் வழங்கப்பட்டுள்ள தண்டனை எதிர்பார்த்ததுதான். நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் நீதி மறுக்கப்படவில்லை என்பது தெளிவாகி உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூதுக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்றங்கள் தேவை அரசியல்வாதிகள் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் நீண்டநாள் கோரிக்கை. பிகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு வர 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவந்துள்ளது. மசூத் வழக்கு 17 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 2-ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் உள்ளிட்ட பிற வழக்குகளும் நீண்ட தாமதம். ஆகி வருகின்றன. லாலு வழக்கில் காணப்பட்டது போலவே இந்த வழக்குகளிலும் வழக்கு தொடுக்கும் அமைப்புகளால் தாமதம் ஏற்படுகிறது.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட கிரிமினல் குற்ற வழக்குகள், ஊழல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கும்படி பா.ஜ.க. வலியுறுத்தும் என்றார் வெங்கய்ய நாயுடு.
ஊழல் புரியும் எவரையும் சட்டம் தப்பிச் செல்ல விடாது என்பதுதான் லாலு வழக்கு சொல்லும் பாடம் என்றார் பாஜக மூத்த தலைவரான ரவி சங்கர் பிரசாத்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்பி ஷபீர் அலி தெரிவித்த கருத்து: அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக வலம்வந்தார் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத். அவருக்கு எதிரான வழக்கில் வெளியான தீர்ப்பு அவரது கட்சியை பலவீனப்படுத்திவிட்டது. ஊழல் புரிபவர்கள் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்த்திவிட்டது என்றார்.
WRITE A COMMENT