Published : 23 Mar 2014 10:47 AM
Last Updated : 23 Mar 2014 10:47 AM

அத்வானியை புறக்கணிப்பது ஏன்?: பாஜகவிடம் சிவசேனை கேள்வி

மூத்த தலைவர் அத்வானியை புறக்கணிப்பது ஏன் என்று பாஜக விடம் அதன் கூட்டணி கட்சியான சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

1991 முதல் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் அத்வானி போட்டி யிட்டு வருகிறார். அந்தத் தொகுதியில் இருந்து ஐந்து முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அவர் இந்த முறை மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவருக்கு போபால் தொகுதி ஒதுக்கப்படவில்லை. மீண்டும் காந்திநகர் தொகுதியே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அத்வானியை கட்சியின் மூத்த தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் சந்தித்து சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து காந்தி நகரில் போட்டியிட அத்வானி சம்மதம் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

இந்த விவகாரம் தொடர் பாக சிவசேனை கட்சியின் அதிகாரப் பூர்வ இதழான சாம்னாவில் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் அத்வானியின் பெயர் இல்லை. இதுபோன்று நடந்திருக்கவே கூடாது. கட்சியை வளர்த்த தலை வர்களில் அத்வானியும் ஒருவர். அவரது தொகுதியை முடிவு செய்வதில் இவ்வளவு நீண்ட தாமதம் ஏன்? இது அவருக்கு இழைக்கப்பட்ட அவமானமா?

கட்சியில் இப்போது நரேந் திர மோடியின் காலம் தொடங்கி யிருக்கலாம். அதற்காக அத்வானி யின் சாம்ராஜ்ஜியம் முடிந்துவிட்ட தாக அர்த்தம் இல்லை. அவரது அரசியல் வாழ்க்கையில் இதுவரை எந்த கறையும் ஏற்பட்டது இல்லை.

வாரணாசியில் மோடி போட்டி யிட வேண்டும் என்பதற்காக அந்தத் தொகுதி எம்.பி.யான முரளி மனோகர் ஜோஷிக்கு கான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரை காஜியாபாதில் போட்டியிட்ட ராஜ்நாத் சிங் மிகவும் பாதுகாப்பான லக்னோ தொகுதியை தேர்ந்தெடுத் திருக்கிறார். அமிர்தசரஸ் தொகுதியில் நவ்ஜோத் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அந்தத் தொகுதி அருண் ஜேட்லிக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்வானி விவகாரத்தில் மட்டும் ஏன் பாரபட்சம்?

இப்போதைய அரசியல் சூழ்நிலை இப்படியே நீடிக்கும் என்று கூற முடியாது. ஒரு சிறு சம்பவத்தால் மிகப் பெரிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக பதில்

இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது: சிவசேனையுடனான எங்கள் கூட்டணி நீண்ட பாரம்பரியம் கொண் டது. அதில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் கூட்டணி உறுதியாகத் தொடர்கிறது. இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.

காங்கிரஸ் கருத்து

இந்த விவகாரம் குறித்து காங் கிரஸ் மூத்த தலைவர் சத்திய விரத சதுர்வேதி டெல்லியில் கூறிய தாவது:

பாஜகவுக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. மற்றவர்களுக்கு அந்தக் கட்சி அறிவுரைகளை அள்ளி வீசும். ஆனால் யாராவது ஒருவர் பாஜகவுக்கு அறிவுரை கூறினால் பிரச்சினை வெடிக்கும். மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கும் முன்பு பாஜக தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

சிவசேனை- பாஜக மோதல்

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனையும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆனால் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரேவுடன் பாஜக நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக உத்தரப் பிரதேசம், பிகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து சிவசேனை வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இப்போது பாஜகவை நேரடியாக விமர்சித்து உத்தவ் தாக்கரே தலையங்கம் எழுதியிருப்பது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப் பாகப் பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x