Last Updated : 16 Apr, 2015 11:39 AM

 

Published : 16 Apr 2015 11:39 AM
Last Updated : 16 Apr 2015 11:39 AM

காஷ்மீர் பேரணியில் பறந்த பாகிஸ்தான் கொடி: பாரபட்சமற்ற நடவடிக்கைக்கு ராஜ்நாத் உத்தரவு

காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகளை ஏந்திச் சென்றது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வருக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான கிலானி 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியானார்.

இந்நிலையில், அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் புதன்கிழமை ஸ்ரீநகரில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கடந்த மாதம் சிறையிலிருந்து வெளிவந்த மஸ்ரத் ஆலம் தலைமையேற்று நடத்தினார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள், தங்களது கைகளில் ஹுரியத் மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகளை ஏந்தி, அந்த நாட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்த நிகழ்வு மத்திய அரசை அதிருப்தியடைய செய்துள்ளது. தேச விரோதமான செயலுக்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், காஷ்மீர் முதல்வர் முப்தியை தொடர்பு கொண்டு நேற்றிரவு பேசினார். ஊர்வலம் குறித்து ராஜ்நாத்துக்கு முப்தி விளக்கமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது, "தேசிய பாதுகாப்புக்கு தொடர்புடைய விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கையை எந்தவித பாரபட்சமும் இன்றி மேற்கொள்ள வேண்டும்" என்று காஷ்மீர் முதல்வர் முப்தியிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்ததாக உள்துறை அமைச்சக தகவலில் குறிப்பிடப்பட்டது.

பேரணிக்கு தலைமை தாங்கிய மஸ்ரத் ஆலம், காஷ்மீரில் முப்தி அரசு பதவியேற்ற சில நாட்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் கலவரத்தின் போது, இளைஞர்களை பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி அதன் விளைவாக 100 பேர் பலியானது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இவரது விடுதலை காஷ்மீர் மாநில அரசோடு கூட்டணியில் இருக்கும் பாஜக-வை அதிருப்தியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x