Published : 31 Mar 2017 12:40 PM
Last Updated : 31 Mar 2017 12:40 PM
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வெள்ளியன்று உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வின் முன் ஆஜராகி வாதிட்டார்.
கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்பாக கர்ணனுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது, அதாவது அவர் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதை உறுதி செய்வதற்காக இந்த வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் அவர் ஆஜராகி கூறும்போது, “என்னுடைய பணியை மீட்டுத்தாருங்கள், இல்லையெனில் அடுத்த முறை நான் உங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன். என்னை சிறைக்கு அனுப்புங்கள். நான் பயங்கரவாதியோ, சமூக விரோத சக்தியோ அல்ல” என்று சற்றே குரலை உயர்த்திப் பேசினார்.
இதனையடுத்து நீதிபதிகள், “இவரது (நீதிபதி கர்ணன்) மனநிலை தெளிவில்லாமல் உள்ளது. தான் என்ன செய்கிறோம் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று குறிப்பிட்டனர்.
ஆனால் குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, “அவர் புரிந்து கொள்ளவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் மிகத் தெளிவாக இருக்கிறார்” என்றார்.
நீதிபதிகள் மேலும் கர்ணனிடம் கேட்கும் போது, “20 நீதிபதிகள் மீதான புகார்களில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது புகாரை வாபஸ் பெற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறீர்களா?” என்றனர்.
ஆனால் இதனை ஏற்காத கர்ணன், “நான் கொடுத்த புகார் (20 நீதிபதிகள் மீதான ஊழல் புகார்) சட்டரீதியானதே” என்றார்.
ஆனால் அமர்வு, “ஒரு நீதிபதியாக இருந்தும் உங்களுக்கு நடைமுறை தெரியவில்லையே” என்று கூறியது.
இதனையடுத்து அவரிடமிருந்து களையப்பட்ட பணி அதிகாரத்தை திரும்ப வழங்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது.
நீதிபதி கர்ணன் கூறும்போது, தன்னுடைய பணியை திருப்பி அளித்தால் 20 நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, அவர்களது ஜாதிப்பாகுபாடு ஆகியவற்றை நிரூபிப்பேன் என்றார்.
அவமதிப்பு நோட்டீஸுக்கு பதில் அளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT