Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM
மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி பேசிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்திடம் பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மீறி வருறார்கள். மக்களவைத் தேர்தலின்போது வகுப்பு கலவரத்தை தூண்டும் வகையில் ராகுல் காந்தி பேசி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் உணர்வுகளைத் தூண்டி பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் ராகுல் காந்தி பேசி வருகிறார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருகிறார்.
மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் பொறுப்பு என்ற வகையில் தவறான தகவல்களை ராகுல் காந்தி பரப்பி வருகிறார். அதன் மூலம் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே அவர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். ராகுலின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, கடும் கண்டனத்துக்கு உரியவை.
ராகுல் காந்தியின் கருத்துக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்தக் கட்சித் தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. ராகுல் கருத்தை காங்கிரஸும் அதன் தலைவர்களும் ஆதரித்துப் பேசி வருகின்றனர்.
எனவே மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து நடத்தை விதிகளை மீறி வரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
மும்பை புறநகர்ப் பகுதியான பிவண்டியில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று கடுமையான விமர்சனம் செய்தார். இதுதொடர்பாகவே பாஜக சார் பில் தேர்தல் ஆணையத்திடம் இப் போது புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT