Published : 10 Nov 2014 05:38 PM
Last Updated : 10 Nov 2014 05:38 PM
டெல்லியில் இரண்டாவது நாளாக கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக 'காதல் முத்த' போராட்டத்தை மாணவர்கள் மேற்கொண்டனர்.
கொச்சி, ஐதராபாத், கொல்கத்தாவைத் தொடர்ந்து காதல் முத்தப் போராட்டம் தலைநகர் டெல்லிக்கும் பரவி இருக்கிறது. டெல்லியில் கங்கா தாபா என்ற இடத்தில் மாலை 4.30 மணி அளவில் அங்கு கூடிய மாணவர்கள், கலாச்சார பாதுகாவலர்களுக்கு எதிராக பதாகைகளை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தும் முத்தமிட்டும் டெல்லியில் தங்களது முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள், தங்களது ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் செல்போன்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முறைகேடான எச்சரிக்கைக்களை விடுப்பதாகக் கூறி டெல்லியில் உள்ள ஜாந்தேவாலனில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்க அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
ஆனால் மாணவர்களை போலீஸார் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் இருக்கும் இடத்துக்கு அருகே நுழைய விடாமல் தடுப்புகளை அமைத்து மாணவர்களை கலைந்து போக செய்தனர். அப்போது மாணவர் ஒருவர் கூறும்போது, "எங்களுக்கு எங்களது உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. அதைத் தான் நாங்கள் கேட்கிறோம். முத்தமிடுவதும், கட்டி அணைப்பதும் நமது கலாச்சாரத்துக்கு எதிரானது அல்ல. அவை நமது வேதங்களில் இருக்கின்றன. கஜுராஹோவில் பொறிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரத்தை பாதுகாக்க சீருடை அணியாத பாதுகாவலர்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் தொடரும்" என்றார்.
கேரளாவின் கொச்சியில் பாஜக இளைஞர் அணியினர் காபி ஷாப்பில் புகுந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இது போன்ற கலாச்சார காவலர்கள் என்ற பெயருடன் இயங்குவோருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து கொச்சி, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த நூதனப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் (திங்கட்கிழமை) அவர்களது போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதற்கு அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் அபிஷேக் ஸ்ரீவத்சா கூறும்போது, "காதல் என்பது தனிப்பட்ட உணர்வு. அதனை பொது இடங்களில் வெளிப்படுத்த வேண்டாம் என்று தான் நாங்கள் கூறுகிறோம். நாங்கள் காதலுக்கும் முத்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவை தெருக்களில் நடந்தால் ஆபாசம் என்று தான் கூறுகிறோம். நமது அரசியல் அமைப்பு சட்டத்திலேயே சில உணர்வு வெளிப்பாடுகளுக்கு தடை உள்ளது.
நாங்கள் மாணவர்கள் நலனுக்கு போராட வகுப்பறையை விட்டு வெளியேறும் நிலையில், இந்த இடதுசாரி மாணவர்கள் ஏன் அநாகரீகத்துக்கு ஆதரவு அளிக்க முன்வருகின்றனர் என்று தெரியவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT