Published : 28 Sep 2013 11:30 PM
Last Updated : 28 Sep 2013 11:30 PM

பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதம்: ஐ.நா.வில் மன்மோகன் சாடல்

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பயங்கரவாத எந்திரங்கள் மூடப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 68–வது பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசும்போது, “காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ள இந்தியா உறுதிகொண்டுள்ளது. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது. இந்தியாவின் ஒற்றுமையில், பிரதேச ஒருமைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்த விவகாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு, பாகிஸ்தானும், அதன் கட்டுப்பாட்டில் வருகிற பகுதிகளும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு உதவக்கூடாது. அதைத் தூண்டிவிடவும் கூடாது. இது தவிர்க்க இயலாத ஒன்று. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஒரு புதிய தொடக்கத்தைக் காண விரும்புவதாக கூறியிருக்கிறார். அதே உணர்வுகளே என்னிடமும் உள்ளது. அவரைச் சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன்.

அதேவேளையில், பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத எந்திரங்கள் மூடப்பட வேண்டும். பாகிஸ்தான் அரசின் உதவியுடன் எல்லைத் தாண்டி இந்தியாவில் நடத்தப்படுகிற பயங்கரவாதம் கவலை அளிக்கிறது. இந்தப் பகுதியில் பயங்கரவாதம், பாகிஸ்தானில் மையம் கொண்டு செயல்படுகிறது” என்றார் மன்மோகன் சிங்.

மேலும், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். நடப்பு அரசியல் நிலவரத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக, நிரந்தரமற்ற உறுப்பினர்களாக்கப்பட வேண்டும்” என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x