Published : 28 Feb 2015 03:27 PM
Last Updated : 28 Feb 2015 03:27 PM
வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 'சலுகை' அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும்.
அதற்கான விளக்கம் இதோ:
இந்த பட்ஜெட்டில் பிரிவு '80 டி' மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது என்பதால், அவர்கள் செய்யும் மருத்துவ செலவுகளை வரி செலுத்தும் வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள முடியும். இந்த தொகை 30,000 ரூபாய்.
மூன்றாவதாக, பென்ஷன் திட்டங்களில் செய்யும் முதலீடுகளில் 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, மாத சம்பளக்காரர்களுக்கு போக்குவரத்து படி விலக்கு தொகை மாதத்துக்கு 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்தத் தொகை மாதத்துக்கு 800 ரூபாயாக இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட சலுகைகள் இவ்வளவுதான். ஏற்கெனவே இருக்கும் சலுகைகளை வைத்து 4.4 லட்ச ரூபாய்க்கு விலக்கு என்பதை அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார்.
எப்படி 4.4 லட்ச ரூபாய்?
* 80 சி பிரிவு முதலீடு மூலமாக கிடைக்கும் வரிச் சலுகை ரூ. 1,50,000 (காப்பீடு, மியூச்சுவல் பண்ட், பிஎப் உள்ளிட்ட முதலீடுகள்)
* 80 சிசிடி பிரிவு மூலமாக கிடைக்கும் வரிச்சலுகை ரூ.50,000 (பென்ஷன் திட்டத்தில் முதலீடு)
* வீட்டுக்கடன் வட்டி - ரூ.2,00,000
* ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை - ரூ.25,000
* போக்குவரத்து படி மூலம் கிடைக்கும் சலுகை - ரூ.19,200
மொத்தச் சலுகை ஆண்டுக்கு - ரூ.4,44,200
| வாசிக்க - >வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை; கார்பரேட் வரி குறைப்பு - மத்திய பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT