Published : 21 Nov 2014 04:08 PM
Last Updated : 21 Nov 2014 04:08 PM
இந்தியாவை உலக நாடுகள் மிகுந்த மரியாதையுடனும் மகத்தான உற்சாகத்தோடும் பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) நாடு திரும்பினார்.
இந்த நிலையில் தனது சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் தனது வலைப்பதிவில் கூறும்போது, "எனது 10 நாள் சுற்றுப் பயணத்தில் 38 நாடுகளின் தலைவர்களுடன் 20 இரு நாட்டு சந்திப்புகளை மேற்கொண்டேன்.
இந்தப் பயணத்தின் மூலம் நமது நாட்டின் மீது உலக நாடுகள் புதிய மரியாதை கொண்டுள்ளதையும், நம்மை அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்ப்பதையும் கவனிக்க முடிந்தது. நமது நாட்டுடன் அனைவரும் இணக்கமான உறவை ஏற்படுத்த விரும்புகின்றனர்.
'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் அவர்களை பெரிய அளவில் சென்றடைந்துள்ளது. பல தலைவர்கள் நமது நாட்டில் தொழில் தொடங்க ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
ஜி-20 மாநாட்டில் பல நாடுகளின் தற்போதைய பிரச்சினையான கருப்புப் பண விவகாரம் குறித்து நாம் முன்வைத்த கோரிக்கை அனைவராலும் எதிர் நோக்க கூடியதாக இருந்தது. சர்வதேச நாடுகள் அனைத்தின் கவனமும் இந்த விஷயத்தின் மீது திரும்பியது. ஏனென்றால் கருப்பு பணத்தால் நமது நாடு மட்டும் பாதிக்கப்படவில்லை.
கருப்பு பணத்தினால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அமைதி பாதிக்கப்படுவதோடு நல்லிணக்கம் சீர்குலைக்கப்படும். கருப்பு பணத்தால் தான் பண மோசடி, போதை மருத்து கடத்தல், பயங்கரவாதம் ஆகியவற்றைக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆசியான் உச்சி மாநாடு உலக நாடுகளை இணைக்கும் விதமாக இருந்தது. அதில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் தோழமை நாடுகளின் நிலைபாடு குறித்து அறிந்துகொள்ள உதவியது. உலக அரங்கில் இந்தியா மீது உறுதியான பார்வை ஏற்படும் என்று நான் உறுதியுடன் நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT