Published : 04 Oct 2013 08:40 AM Last Updated : 04 Oct 2013 08:40 AM
கழிவறையைச் சுத்தம் செய்த அனுபவம் மோடிக்கு உண்டா? - திக்விஜய் சிங் கேள்வி
கழிவறையைச் சுத்தம் செய்பவர்களுக்கு தெய்வீக உணர்வு கிட்டும் என மோடி தெரிவித்துள்ளார். அவருக்கு கழிவறையைச் சுத்தம் செய்த அனுபவம் உண்டா? அந்த உணர்வு கிடைத்ததா என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இது தொடர்பாக கூறுகையில், "நாட்டில் கழிப்பறை கட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கோயில் கட்டுவது இரண்டாம்பட்சமாக இருக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்பு கூறியபோது பாஜக கண்டனம் தெரிவித்தது. இப்போது அக்கட்சி மௌனமாக இருப்பது ஏன்?
கழிப்பறையைச் சுத்தம் செய்பவர்களுக்கு தெய்வீக உணர்வு கிடைக்கும் என மோடி கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் இதுபோன்ற அனுபவத்தை இதற்கு முன் பெற்றுள்ளாரா, அவர் கழிவறையைச் சுத்தம் செய்திருக்கிறாரா? எனக் கேட்க விரும்புகிறேன்"
மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறும்போது, "மோடி எதைச் சொன்னாலும் பாஜக மௌனமாக இருப்பதுடன், அவரை ஆதரிக்கவும் செய்கிறது. ஜெய்ராம் ரமேஷ் இந்தக் கருத்தைக் கூறிய போது கடுமையாக எதிர்த்ததுடன், நாட்டின் முன்பு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
மோடி ஓர் இந்து தலைவர் அல்ல. அவர் எதுவும் செய்யவில்லை. இந்துக்களின் தலைவரும் அல்ல. அவரின் பார்வைகளும் முற்றிலும் வேறானவை. இந்துக்களின் தலைவரைப் போல முன்னிறுத்திக் கொண்டு, இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்" என்றார்.
முன்னதாக, புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மோடி, "நான் இந்துத்துவா தலைவராக அறியப்படுகிறேன். என் மீதான பிம்பம் தற்போது ஒரு கருத்தைக் கூற அனுமதிக்காது. இருப்பினும் தைரியமாகச் சொல்கிறேன். கழிவறை கட்டுவதற்கே முக்கியத்துவம், கோயில் கட்டுவது இரண்டாம்பட்சம்தான்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "பிரதமர் பதவியின் மேலுள்ள கண்மூடித்தனமான ஆசையின் காரணமாக மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். வேண்டாவெறுப்பாகவே அவர் இதைக் கூறியுள்ளார். இந்த ஞானோதயம் 1992 ஆம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும்" என்றார்.
WRITE A COMMENT