Published : 08 Nov 2014 12:01 PM
Last Updated : 08 Nov 2014 12:01 PM
கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நேற்று தொடங்கி வைத்தார். சுமார் 15 நிமிடங்கள் அவரே மண்வெட்டியால் தோண்டி மண்ணை அகற்றினார்.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தூய்மை திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
வாரணாசியில் பிரதமர் மோடி
இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதி யான வாரணாசிக்கு நேற்றுமுன் தினம் சென்றார். முதல்நாளில் நெசவாளர்களுக்காக ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தக மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது ஜெயாபூர் கிராமத்தையும் அவர் தத்தெடுத்தார்.
இரண்டாம் நாளான நேற்று வாரணாசியில் கங்கை நதிக் கரையான அசிகாட் பகுதிக்கு அவர் சென்றார். அங்கு கங்கைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழி பட்டார். பின்னர் நதிக் கரையில் குவிந்திருந்த மண்மேட்டை மக்களோடு மக்களாக இணைந்து மண்வெட்டியால் தோண்டி அப் புறப்படுத்தினார்.
அங்கு அவர் சுமார் 15 நிமிடங்கள் மண்ணை அள்ளி நதிக்கரையை சுத்தப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
கங்கை நதிக்கரைகளை சுத்தப் படுத்தும் திட்டத்தை நானே களத்தில் இறங்கி தொடங்கிவைத்துள்ளேன். இது பொதுமக்களுக்கு முன்மாதிரியாக, தூண்டுகோலாக அமையும். கங்கை நதி தூய்மைப் பணியில் பொதுமக்கள் அனை வரும் பங்கேற்க வேண்டும்.
இன்னும் ஒரு மாதத்தில் கங்கை நதிக்கரைகள் தூய்மையாகக் காட்சியளிக்கும் என்றும் சமூக நல அமைப்புகள் என்னிடம் உறுதி அளித்துள்ளன. அந்த வார்த்தை செயல்வடிவம் பெற வேண்டும்.
கங்கை தூய்மைப் பணி திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், போஜ்புரி பாடகர் மனோஜ் திவாரி, சூபி பாடகர் கைலாஷ் கெர், நகைச்சுவை நடிகர் ராஜு வத்ஸவா, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முகமது கைப், சுவாமி ராம்பாத் ஆச்சார்யா, சம்ஸ் கிருத அறிஞர் தேவி பிரசாத் துவிவேதி, எழுத்தாளர் மனு சர்மா ஆகியோர் அடங்கிய 9 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பணியை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லண்டனை போன்று காசியும் மாறும்
வாரணாசியின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி நேற்றுமுன் தினம் இரவு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
லண்டன் நகரைப் போன்று பழமை மாறாமல் காசியும் நவீன நகரமாக மாற்றப்படும். பொது போக்குவரத்துக்கு பேட்டரி கார்கள் பயன்படுத்தப்படும், வீடுகள் தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கப்படும். டெல்லியில் இருந்து அயோத்தி, அலகாபாத் வழியாக வாரணாசிக்கு சொகுசு ரயில் இயக்கப்படும். பனாரஸ் இந்து கல்லூரி முழுவதும் வைபை வசதி செய்யப்படும். வாரணாசியின் கங்கை நதிக்கரைகள் தொழில்நுட்ப உதவியுடன் சுற்றுலா தலங்களாக மாற்றப்படும்.
மத்திய அரசின் நல்லாட்சியால் மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப் பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக வெற்றிவாகை சூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT