Published : 22 Mar 2014 06:27 PM
Last Updated : 22 Mar 2014 06:27 PM
தனக்கு விருப்பமான தொகுதி ஒதுக்கப்படாத நிலையில், பாஜக தலைமையை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் விமர்சித்தார்.
தற்போதைய சூழலில் உண்மையான பாஜகவுக்கும், போலியான பாஜகவுக்கும் இடையிலான வேறுபாடுகளை வெளிக்கொணர வேண்டிய நிலை எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்பியாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (75) ராஜஸ்தானின் பாமர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். பாமரின் ஜசோல் கிராமத்தில் பிறந்தவரான ஜஸ்வந்த் சிங்கின் குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றனர்.
ஆனால், அவரை கட்சி மீண்டும் டார்ஜிலிங்கிலேயே போட்டியிட வைக்க பாஜக தீர்மானித்தது. காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த ஜாட் சமூகத்தை சேர்ந்த சோனாராமை பார்மரில் போட்டியிட வைக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே விரும்புகிறார். இதற்கு, பாஜக் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
தனது கோரிக்கையை கட்சியின் தலைமை ஏற்காததால், பாமரில் சுயேட்சையாக போட்டியிடுவது என்று ஜஸ்வந்த் சிங் முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், பாஜகவில் இருந்து அவர் விலகக் கூடும் என்றும் செய்திகள் வருகின்றன. இது தொடர்பான தனது முடிவை ஜஸ்வந்த் சிங் நாளை மறுதினம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜோத்பூரில் இன்று செய்தியாளர்களிகளிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், "உண்மையான பாஜகவுக்கும் போலியான பாஜகாவுக்கும் இடையிலான வேறுபாடுகளை வெளிக்கொணர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளே இதற்கான தேவையை ஏற்படுத்தி இருக்கிறது" என்றார்.
மேலும், பாஜகவின் கொள்கைகளை தங்களது ஆதாயத்துக்காக சிலர் மாற்றி வருவதாக, எவரது பெயரையும் குறிப்பிடாமல் பாஜக தலைமையை ஜஸ்வந்த் சிங் சாடினார்.
பாஜகவின் நிறுவனத் தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங், அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி ஆகிய மூத்த தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT