Published : 12 Mar 2014 03:33 PM
Last Updated : 12 Mar 2014 03:33 PM
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட 15 பேருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா ஆகி யோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து கடந்த ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர்களைத் தவிர பல்வேறு வழக்குகளில் தூக்குத் தண்டனை பெற்ற சுரேஷ், ராம்ஜி, குர்மித் சிங், ஜாபர் அலி (உத்தரப் பிரதேசம்), சிவு, ஜதேஸ்வாமி, பிரவீண் குமார் (கர்நாடகம்), சோனியா, சஞ்சீவ் (ஹரியாணா), சுந்தர் சிங் (உத்தரகண்ட்), மக்கன் லால் பேராலா (மத்தியப் பிரதேசம்) ஆகியோரும் தண்டனை குறைப்பு பெற்றனர்.
இவர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் மீதான முடிவை மிகவும் கால தாமதமாக வெளியிட்டதால், தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “கருணை மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்காமல், குற்றவாளி களை எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்ததன் காரணமாக தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பது சரியானது அல்ல.
தீவிரவாத நடவடிக்கை களில் ஈடுபடுவோருக்கும், மற்ற குற்றவாளிகளுக்கும் இடையே யான வித்தியாசத்தை கருத்தில் கொள்ள உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது.
கருணை மனு மீதான முடிவைக் குடியரசுத் தலைவர் அறிவித்த பின்பு, அதில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கைப் பொறுத்த வரையில் வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். அப்படியிருக்கையில், கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கால தாமதம் என்ற காரணத்தைக் கூறி, குடியரசுத் தலைவரின் முடிவுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பிப்பது சரியல்ல.
கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம்தான் முறையிட்டிருக்க வேண்டும்.
குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்க வேண்டும்.
எனவே, தண்டனைக் குறைப்பு தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவா கிட்டு சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மத்திய அரசின் மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல. எனவே, அந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்தனர்.
வீரப்பன் கூட்டாளிகளுக்கு தண்டனை குறைப்புச் செய்யப்பட்டதை மேற்கோள் காட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தண்டனை குறைப்பு பெற்றனர். இந்த தண்டனை குறைப்பை எதிர்த்தும் மத்திய அரசின் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT