Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். தப்பிய குற்றவாளிகள் குறித்தும் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மீது செம்மரக் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியது. இடத்தில் 22 வனத்துறை யினர் படுகாயம் அடைந்தனர். கடத்தல் கும்பலால் பிடித்துச் செல்லப்பட்ட ஸ்ரீதரன், டேவிட் ஆகிய இரு அதிகாரிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க சித்தூர், கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் சிறப்பு போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கொண்ட 17 குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை ஒரே நாளில் 400க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
சித்தூர் மாவட்டம் பீலேர் அடுத்த அரட்டுப்பள்ளி கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். தப்ப முயன்ற 22 செம்மரக் கடத்தல்காரர்களை கைது செய்தனர்.
காட்டிக்கொடுத்த மெமரி கார்டு
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், கோவிந்த ராஜ் என்பவரது செல்போனில் ஒரு மெமரி கார்டு இருந்தது. அதை சோதித்தபோது, கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரி குடும்பத்தினரின் போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இருந்தன. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் வனத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் மீது வனத்துறை சட்டம் 302, 147, 148, 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய மற்ற குற்றவாளிகள் குறித்தும் சம்பவத்துக்குப் பின்னணியாக இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT