Published : 10 Feb 2014 02:32 PM
Last Updated : 10 Feb 2014 02:32 PM

கிரிக்கெட் சூதாட்டத்தில் குருநாத் ஈடுபட்டது உண்மை: முகுல் முத்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அவை குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐ.பி.எல். அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் அடங்கிய மூவர் கமிஷனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸின் முகம் மெய்யப்பன்

இந்த கமிஷன் கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி தனது 100 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகமாகவும் நிர்வாகக் குழு அலுவலராகவும் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் டெல்லி, சென்னை போலீஸார் அளித்த தகவல்கள், மும்பை போலீஸார் தாக்கல் செய்த எப்.ஐ.ஆர்., குற்றப் பத்திரிகை, தொலைபேசி உரையாடல் விவரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது விண்டு தாரா சிங் மூலம் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக மட்டுமல்ல, அந்த அணிக்கு எதிராகவும் பணம் கட்டி மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர்த்து இதர அணிகளின் மீதும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் குறித்து இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சீனிவாசன் மீதான புகார்கள்

இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா, தரகர் உமேஷ் கோயங்கா மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக உமேஷ் கோயங்கா போலீஸாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார். எனவே இந்த விவகாரம் குறித்தும் இன்னும் அதிகமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மீது கூறப்படும் புகார்களும் முக்கியத்துவம் வாய்ந்ததவை, ஆனால் அவை குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மூவர் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த 10 அம்ச திட்டத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் கமிட்டி அளித்துள்ளது. அதன்படி கிரிக்கெட் சூதாட்ட ஊழல் கண்காணிப்பு பணியில் ஓய்வுபெற்ற ராணுவ, போலீஸ் அதிகாரிகளை ஈடுபடுத்தலாம் என்று கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமம் ரத்து?

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் பெங்களூரில் புதன்கிழமை நடைபெறும் நிலையில் முகுல் முகுத்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல். அணியோ, அதன் உரிமையாளர்களோ பிசிசிஐ, ஐ.பி.எல். அமைப்புகளின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தினால் அந்த அணியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஒப்பந்த விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x