Last Updated : 07 Oct, 2013 11:57 AM

 

Published : 07 Oct 2013 11:57 AM
Last Updated : 07 Oct 2013 11:57 AM

காங்கிரஸில் குழப்பம்

காங்கிரஸ் கட்சியிலும் சரி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் சரி, தற்போது மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அவசரச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட்டு, அதை தடுத்து நிறுத்திய பின்பு, இந்த குழப்பம் பல மடங்கு அதிகரித்து விட்டது.

காங்கிரஸில் இறுதி முடிவு எடுப்பது யார்? சோனியா காந்தியா, அவரது மகன் ராகுலா அல்லது கட்சியின் முக்கியஸ்தர்களா என்பதில் தொடங்கி பலவிதமான குழப்பங்களில் கூட்டணி கட்சிகள் சிக்கித் தவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க காங்கிரஸில் இருவரின் தலை மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறதாம். அதில் ஒருவர் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல், மற்றொருவர் திக்விஜய் சிங்.

குற்றச்செயலில் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு சாதகமான ஓர் அவசரச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில், முக்கிய பங்கு வகித்தது மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபலாம். லாலுவின் ஆதரவாளரான கபில், இது போன்ற ஓர் சட்டத்தை கொண்டு வர முயற்சித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அவசரச் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர விரும்புவது ஏன் என்று கபில் சிபலிடம் கேள்வி எழுப்பியிருந்தாராம். இப்போது கபில் மீது ராகுலுக்கு அதிருப்தி என்று பேச்சு நிலவுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் கட்சியின் மூத்தவரான திக்விஜய் சிங்கைவிட, இளையவரான ஜோதிராதித்யா சிந்தியாவுக்குத்தான் ராகுல் ஆதரவாக இருக்கிறாராம். எனவே, திக்விஜயின் எதிர்காலமும் கேள்விக்குறியாகத்தான் காட்சியளிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, திடீரென தெலங்கானா விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்து வருகின்றனர். சீமாந்திரா பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சோனியா காந்தி மீது கடும் கோபத்தில் உள்ளனர். தனிப்பட்ட முறையில் பேசும்போது, ராகுலை பிரதமராக்கத்தான் ஆந்திரத்தைப் பிரிக்கிறார் சோனியா என்ற ஜெகன்மோகன் ரெட்டியின் (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர்) கருத்தை அப்பகுதியைச் சேர்ந்த கதர்ச்சட்டைக்காரர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

இதென்ன, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் சங்கதியொன்றை கூறுகிறீர்களே என்று கேட்டால், “இப்போதைய நிலையில் (ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசம்) தேர்தலை சந்தித்தால் தெலங்கானா பகுதியில் 3 இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது. இதுவே தெலங்கானா தனி மாநிலமானால், அங்கு 15 இடங்கள் வரை காங்கிரஸுக்கு கிடைக்கும் என்ற புதுக் கணக்கை அக்கட்சியினர் கூறுகின்றனர். ஓஹோ, இவ்வளவு எதிர்ப்பையும் மீறி தனி மாநிலம் அமைப்பதற்கு அது தான் காரணமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x