Published : 16 Dec 2013 04:53 PM
Last Updated : 16 Dec 2013 04:53 PM
டெல்லியில் வரும் ஜனவரி 17ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பாரதிய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஆனால், அதே போன்று தனது வேட்பாளர் பெயரை அறிவிப்பதை காங்கிரஸ் தவிர்த்து வருகிறது.
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவு வெளியான டிசம்பர் 8-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளரை சரியான சந்தர்ப்பத்தில் உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சோனியா காந்தி சந்தித்தார். அவரிடம், வரும் தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அந்த கேள்விக்கு பதில் அளிப்பதை சோனியா காந்தி தவிர்த்துவிட்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதியிடம் இதே கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “இப்போது இந்த கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லை. காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் தீர்மானங்கள் கொண்டு வரப்படும்.
தற்போதைய அரசியல் நிலை, முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.
காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், “பலவீனமான தலைவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள்” என்று மறைமுகமாக காங்கிரஸ் தலைமையை தாக்கி பேசியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அக ஆய்வு செய்ய வேண்டும் என்று சோனியா காந்தியும், கட்சியில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியும் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த கூட்டத்தில் கட்சியில் நிர்வாக மாற்றம் உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தாக்கு
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “வாரிசை தேர்ந்தெடுப்பது, அல்லது வாரிசுகளின் பிரதிநிதியாக ஒருவரை ஆட்சியில் அமர்த்துவது ஆகிய குறுகிய வாய்ப்புகளே காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது” என்றார். பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், “யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது. அதே போன்று அதை நிராகரிப்பதற்கு மக்களுக்கும் உரிமையுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT