Published : 02 Nov 2014 11:38 AM
Last Updated : 02 Nov 2014 11:38 AM

கொலை முயற்சி வழக்கில் ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ சரண்: நந்தியாலாவில் பதற்றம்

நந்தியாலா நகரமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை சேர்ந்த நந்தியாலா தொகுதி எம்.எல்.ஏ. பூமா நாகிரெட்டி நேற்று போலீஸில் சரணடைந்தார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்தியாலா நகரமன்ற கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் பரஸ்பரம் கற்கள், நாற்காலிகளால் தாக்கி கொண்டனர். இதில் துணைத் தலைவர் விஜய குமார், கவுன்சிலர் வெங்கட சுப்பையா ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நந்தியாலா எம்.எல்.ஏ. பூமா நாகிரெட்டி முன்னிலையில் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நந்தியாலாவில் நேற்று முழு அடைப்பு நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்தது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள், அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஹோட்டல்கள், திரையரங்குகளும் மூடப்பட்டன. பஸ், ஆட்டோ போன்றவை இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு எம்.எல்.ஏ. பூமா நாகிரெட்டியே காரணம் என தெலுங்குதேசம் கட்சியினர் போலீஸில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் எம்.எல்.ஏ. பூமா நாகிரெட்டி மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் ஒரு வன்கொடுமை வழக்கும் பதிவு செய்து அவரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் நேற்றுமுன்தினம் மாலை முதல் பூமா நாகிரெட்டி தலைமறைவானார்.

இவரை கைது செய்ய பல இடங்களில் போலீஸார் தேடிய நிலையில் நேற்று மதியம் இவர் நந்தியாலாவில் எஸ்.பி. ரவிகிருஷ்ணா முன்னிலையில் சரணடைந்தார்.

‘ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீஸார் என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்’ என எம்.எல்.ஏ. பூமா நாகிரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் நந்தியாலாவில் பெரும் பதற்றம் உண்டாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x