Last Updated : 12 Mar, 2015 10:54 AM

 

Published : 12 Mar 2015 10:54 AM
Last Updated : 12 Mar 2015 10:54 AM

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் சம்மன்: மன்மோகன் சிங்குக்கு சோனியா ஆதரவு - கட்சியினருடன் இல்லத்துக்கு பேரணியாக சென்றார்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று காலை கட்சியினருடன் புறப்பட்ட சோனியா காந்தி, முன் எப்போதும் இல்லாத வகையில் மன்மோகன் சிங் வீட்டுக்கு பேரணியாக நடந்தே சென்றார். அங்கு மன்மோகன் சிங்கை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் மன்மோகன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, வீரப்ப மொய்லி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் சென்றனர்.

பின்னர், மன்மோகன் சிங் இல்லத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மன்மோகன் சிங்குக்கு ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு மன்மோகன் இல்லத்தில் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ள செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சிங் மிகவும் நேர்மையானவர் என்பது இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கே தெரியும். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தவுமே நாங்கள் இங்கு கூடியுள்ளோம்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவாக இருக்கும். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இந்த வழக்கிலிருந்து மன்மோகன் சிங் விடுவிக்கப்படுவார் என்று உறுதியாகக் கூறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சிக்கு மன்மோகன் நன்றி

சோனியா தலைமையிலான காங்கிரஸார் சந்திப்புக்குப் பிறகு மன்மோகன் சிங் கூறும்போது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் என் வீட்டுக்கு வந்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த விவகாரத்தில் குற்ற நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என்று சிபிஐ ஏற்கெனவே கூறியுள்ளது. ஆனால், அரசு இதை நம்ப மறுக்கிறது. மன்மோகனுக்கு எதிரான சம்மன் விலக்கிக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.

மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, “மன்மோகன் சிங்கின் வெளிப் படைத்தன்மை, பாரபட்சமின்மை மற்றும் நேர்மை ஆகியவை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை. எனவே, உண்மை வெல்லும்” என்றார்.

வழக்கு பின்னணி

கடந்த 2005-ம் ஆண்டு ஒடிஸா மாநிலத்தில் உள்ள தலபிரா-2 நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அப்போது நிலக்கரித் துறைக்கு பொறுப்பு வகித்தவர் என்ற அடிப்படையில் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பராக் உள்ளிட்ட 6 பேர் ஏப்ரல் 8-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட பிறகு மன்மோகன் சிங் நேற்றுமுன்தினம் கூறும்போது, “நிச்சயமாக நான் நிலை குலைந்தி ருக்கிறேன். விசாரணைக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று தொடக்கம் முதலே கூறி வந்திருக்கிறேன். நிச்சயம் உண்மை வெளியில் வரும். உண்மையை எடுத்துக்கூற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

நேற்று முன்தினம் இரவு சோனியா காந்தியின் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் அமைச்சர்கள் கபில் சிபல் மற்றும் அஸ்வனி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அஸ்வனி குமார் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவை ஆராய்ந்து வருகிறோம். இந்த வழக்கில் மன்மோகன் சிங்கிடம் விசாரிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று சிபிஐ கூறியுள்ள போதிலும், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனை எதிர்த்து வழக்கு தொடுக்க இந்த ஆதாரமே போதுமானது என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது” என்றார்.

எனவே, மன்மோகன் சிங்குக்கு எதிரான சம்மனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x