Last Updated : 19 Nov, 2014 03:16 PM

 

Published : 19 Nov 2014 03:16 PM
Last Updated : 19 Nov 2014 03:16 PM

பாலியல் பலாத்காரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டோருக்கு தெரிந்தவர்களே

பாலியல் பலாத்கார வழக்குகள் தொடர்பான விவரங்களை டெல்லி உயர் நீதிமன்றம் காவல்துறையிடம் கேட்டுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டோருக்கு தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என்று காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நண்பர்கள் பெரும்பாலும் பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

உதாரணமாக, டெல்லியில், 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரை பதிவாகியுள்ள பலாத்கார வழக்குகள் 1,704 என்றால், 72 வழக்குகளில் மட்டும்தான் பாதிக்கப்பட்டோருக்கு முன்பின் தெரியாதவர்களாக உள்ளனர். அதாவது 4.23 சதவீதம்தான் அன்னியர்களால் பாலியல் பலாத்காரம் நடக்கிறது.

தெரிந்தவர்கள் பட்டியலில், அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள், அதாவது இன் - லா போன்றோர்கள், மாமா, கணவன் அல்லது முன்னாள் கணவன், சில சமயங்களில் தந்தை, பல தருணங்களில் வளர்ப்புத் தந்தை ஆகியோர் மீதே பெரும்பாலான பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் பாலியல் குற்ற வரைபட மாதிரியை போலீஸ் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது.

அக்டோபர் 15-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டோருக்கு தெரிந்தவர்கள், அல்லது உறவினர்களே குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறை அறிக்கை கூறுகிறது.

காவல்துறை உதவி ஆணையர் ஜி.எஸ்.அஸ்வானா இதற்கான விவரங்களை கோர்ட்டில் நேற்று அளித்தார். 1,704 பாலியல் வழக்குகளில் தந்தை மேல் 43 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 23 வழக்குகளில் வளர்ப்புத் தந்தை மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களின் நண்பர்கள் பெயரில் 642 வழக்குகள் பதிவாகியுள்ளன. அண்டை வீட்டுக்காரர்கள் மீது 352 வழக்குகள் பதிவாகியுள்ளன. 83 வழக்குகளில் குடும்ப நண்பர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கணவர் அல்லது மாஜி கணவர் மீது 27 பலாத்கார வழக்குகளும் மாமா அல்லது தாய்மாமன் ஆகியோர் மீது 32 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.

1704 வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1711, இதில் பாதிக்கப்பட்ட 4 பேர் 2 வயதுக்கும் குறைவானவர்கள். 1,704 பேர்களில், 1,198 பேர் திருமணமாகாதவர்கள், 513 பேர் திருமணமானவர்கள்.

மேலும் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரை பதிவான இந்த 1704 வழக்குகளில் 525 பலாத்கார சம்பவங்கள் நான்கு சுவற்றுக்குள் நடந்துள்ளன. 345 சம்பவங்கள் சாலையில் நடந்துள்ளன. 11 சம்பவங்கள் பள்ளிகளில் நடந்துள்ளன.

நந்திதா தார் என்ற சமூக சேவகர் பதிவு செய்த வழக்கு தொடர்பாக இந்த விவரங்களை நீதிமன்றம் கேட்டுள்ளது. நந்திதா தார், பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தனது மனுவில் கோரியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x