Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM
இலங்கையுடன் இந்தியா உறவாடக்கூடாது, பேசக்கூடாது என்று பேசுபவர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்.
மியான்மரில் நடந்த வங்கக்கடல் நாடுகள் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பிரதமர் மன்மோகன் சிங்குடன் விமானத்தில் தில்லி திரும்பும்போது நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசும்போது அவர் கூறியதாவது:
இலங்கையுடனான தொடர்பு பற்றி மத்திய அரசை குறை கூறுபவர்களும் ஆதரிப்பவர்களும் வட மாகாணத்தில் வாழும் தமிழர்களின் நலனை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாணத்துக்கு நான் பயணம் சென்றபோது இலங்கை அரசுடன் பேசக்கூடாது என்றோ உறவாடக் கூடாது என்றோ எவரும் என்னிடம் கூறவில்லை. தேச நலனுக்கு பாதகம் வராத வகையில் தத்தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ள அரசியலில் ஒவ்வொருவருக்குமே உரிமை இருக்கிறது.
வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாத்திட இலங்கையுடன் பேசுவது தான் இந்தியாவின் தேசநலன் ஆகும். கடல் எல்லையைத் தாண்டி செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
இந்தியாவிலிருந்து வரும் மீனவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகளால் கடல் இயற்கைச் சூழல் சேதமடைவதாகவும் இலங்கை யையொட்டிய பகுதிகளின் மீன் வளம் பாதிக்கப்படுவதாகவும் மன்மோகன் சிங்குடன் பேசும்போது ராஜபக்சே தெரிவித்தார். மோதிக்கொள்ளும் இரு தரப்பு மீனவர்களும் தமிழ் இனத்தவர்தான் என்பதை மறந்து விடக்கூடாது என வேதனையுடன் குறிப்பிட்டார் ராஜபக்சே.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனைக் காத்திடவே தான் வாதிடுவ தாகவும் அவர் சொன்னார் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT