Published : 17 Dec 2013 05:26 PM
Last Updated : 17 Dec 2013 05:26 PM
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி, மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூஜ்ய நேரத்தின்போது பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் “இது அரசியல் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்தத் தேசமும் அவமதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களாக பேசப்பட்டு வரும் இப்பிரச்னை மிகவும் தீவிரமானது.
அதிகாரம் மிக்க பதவியில் இருக்கும் மனிதர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குரலை ஒடுக்க என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கின்றனர். அந்த கனவான் (ஏ.கே.கங்குலி) நிச்சயம் பதவி விலக வேண்டும், கைது செய்யப்பட வேண்டும். அல்லது குடியரசுத் தலைவர் அவரை நீக்கம் செய்ய வேண்டும்” என்றார். அப்போது மற்ற எம்.பி.க்கள் ‘வெட்கக் கேடு, வெட்கக்கேடு’ என தொடர்ந்து கோஷமிட்டனர்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, முன்னாள் நீதிபதியின் நடத்தை விரும்பத்தகாதது எனக் கூறியுள்ளதையும் பிரையன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
கங்குலி இழுக்கைத் தேடிக்கொண்டார். அவரை நாம் நீதிபதி என்று கூட அழைக்கக் கூடாது. விதிமுறைகள் தெளிவாக உள்ளன. அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட கங்குலியை பதவி நீக்கம் செய்ய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றார்.
கங்குலி ஆத்திரம்
நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக கொல்கத்தாவில் ஏ.கே.கங்குலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து நான் எவ்வாறு கருத்துக் கூற முடியும்? என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இதைவிட வேறென்ன கூற முடியும்? என்றார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்டோரும் பதவி விலக வலியுறுத்துவது குறித்துக் கேட்டபோது, “இது தொடர்பாக நான் தற்போது எதுவும் கூறமுடியாது’ என்றார்.
ஒரு செய்தியாளர், நீங்கள் ஏன் பதவி விலகுவதில்லை என முடிவெடுத்தீர்கள் எனக் கேட்டபோது, “அது உங்கள் வேலை யல்ல” எனக் கோபமாகப் பதில் சொன்னார். அடுத்து இப்பிரச்னையை எப்படிக் கையாளப்போகிறீர்கள் எனக் கேட்ட போதும் ஆத்திரமாகவே பதில் அளித்தார்.
அவகாசம் கேட்கிறார் கங்குலி
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் விளக்கம் அளிக்க, ஏ.கே. கங்குலி நான்கு வார அவகாசம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா சமந்த் பிரபாவால்கர் கூறுகையில், “இவ்வழக்கு தொடர்பான ஆவ ணங்களைச் சேகரிக்க ஏ.கே.கங்குலி நான்கு வார அவகாசம் கோரியுள்ளார்” என்றார்.
இவ்விவகாரத்தை தானே முன்வந்து எடுத்துக் கொண்ட தேசிய மகளிர் ஆணையம் கடந்த 6 ஆம் தேதி கங்குலிக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.
-பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT