Published : 29 Jan 2015 01:04 PM
Last Updated : 29 Jan 2015 01:04 PM
'மதசார்பற்ற', 'சோஷலிச' (Secular and socialist) ஆகிய இரு வார்த்தைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பாக, தேச அளவில் விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மதச்சார்புகளுக்காக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் நரேந்திர மோடி அரசு, அரசியல் சாசனத்தின் முகவுரையில் இருந்து 'மதசார்பற்ற' என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும் என்ற அமைச்சரின் கருத்தால் மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை (Preamble) படம் இடம்பெற்றிருந்தது. இந்த முகப்புரை 42-வது அரசியல் சாசன திருத்தத்துக்கு முந்தையது என்பதால் அதில் மதசார்பற்ற, சோஷலிச என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. இந்த விளம்பரம் தொடர்பாக மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத் நேற்று மும்பையில் கூறும்போது, "குடியரசு தின விளம்பரத்தில் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டதை வரவேற் கிறோம். தற்செயலாக இது நிகழ்ந்தாலும், இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதாக இருந்தது. இந்த வார்த்தைகள் அரசியலைப்பு சட்டத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்" என்றார்.
இந்நிலையில், 'மதசார்பற்ற', 'சோஷலிச' ஆகிய இரு வார்த்தைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்தியா மதச்சார்பற்ற தேசம் என்பதை நிரூபிக்க அரசியல் சாசனத்தின் முகவுரையில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
1976-ல் தான் அறிமுகம்:
குடியரசு நாளையொட்டி வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பின்னணியில் இடம் பெற்றிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சோஷலிச, மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் விடுபட்டிருந்தது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்தார் ரவிசங்கர் பிரசாத்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியபோது, "1976-ல் எமர்ஜென்சி (நெருக்கடி) கால கட்டத்தில்தான் அரசியல் சாசன முகவுரையில் 'மதசார்பற்ற', 'சோஷலிச' ஆகிய இரண்டு வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன. அவற்றை முகவுரையில் தக்க வைத்துக் கொள்வதா இல்லை நீக்குவதா என்பது குறித்து விவாதம் நடத்துவதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன். தேச அளவில் ஒரு விவாதம் நடத்தவேண்டும். அப்போதுதான் தேசம் என்ன நினைக்கிறது என தெரிந்து கொள்ள முடியும்.
எதிர்காலத்தில், அலுவலகப் பயன்பாட்டிற்காக இந்த இரு வார்த்தைகளும் இல்லாத அரசியலமைப்புச் சட்டத்தின் பழைய முகவுரையே பயன்படுத்தப்படும்; இதுதான் மத்திய அரசின் இப்போதையத் திட்டம்" என கூறியுள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேதைகள் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இணைக்கவில்லை. அப்படியென்றால் தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் நேருவின் பார்வையில் மதச்சார்பின்மை சரியாக புரிந்துகொள்ளப்படவில்லையா? எனவும் ரவிசங்கர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "பாஜகவைப் போல் வேறு எந்த ஒரு கட்சியும், மதச்சார்பின்மை மீதான இத்தகைய கருத்தை கொள்ளவில்லை. இதுவே அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT