Published : 12 Nov 2014 10:09 AM
Last Updated : 12 Nov 2014 10:09 AM
ஆந்திர மாநிலத்தில் மணல் கொள்ளையை தடுக்க அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மணல் விநியோகம் செய்யவும், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியையும் அமல்படுத்தி உள்ளது.
மணல் கொள்ளையை தடுக்க ஆந்திர அரசு புதிய உத்தியை கையாண் டுள்ளது. ஏரி, ஆறுகளில் சட்ட விரோத மாக மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு வருகின்றன. பெண்களுக்கு உதவும் நோக்கில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மணல் அள்ளும் உரிமை வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் அரசுக்கு வரும் லாபத்தில் 25 சதவீதம் வரை பெறுகின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 153 ஏரி, ஆறுகளில் மணல் அள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை 1.55 லட்சம் க்யூபிக் மெட்ரிக் டன் அளவுக்கு மகளிர் சுயஉதவிக் குழுவினர் மணல் விற்பனை செய்துள்ளனர். தற்போது 3.27 லட்சம் மெட்ரிக் டன் வரை மணல் விற்பனைக்கு தயாராக உள்ளது.
ஆன்லைன் வசதி
இன்று முதல் பொதுமக்கள் ஆன்லைனில் பதிவு செய்து மணல் வாங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் அதில் குறிப் பிட்ட தேதியில் வீட்டுக்கே மணல் அனுப்பி வைக்கப்படும். இது வரை மீ-சேவா மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இனி ஆன்லைனிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக http://www.sandbyshg.ap.gov.in எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்த உடன், விற்பனை தேதி, விவரம், இருப்பு விவரம் போன்ற அனைத்து தகவல்களும் செல்போனில் குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது.
இது குறித்து பொது மக்கள் மேலும் விவரம் தெரிந்து கொள்ள 20201211800 என்கிற இலவச தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இது தவிர பேஸ்புக்கிலும் sandminingSHG மூலம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு தகவல் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி உள்ளனர். ஏரி, ஆறுகளில் பணி புரியும் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் ஆந்திராவில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT