Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
அமெரிக்க முதன்மை துணை தூதரிடம் இந்தியாவை வேவு பார்க்கும் என்.எஸ்.ஏ. உளவு அமைப்பின் செயல்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கடந்த வாரம் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியாவில் இணையம் வழியாக பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை அமெரிக்க உளவுத் துறையான என்.எஸ்.ஏ. வேவு பார்ப்பதாக அதன் முன்னாள் ஊழியர் ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்தன.
இதுதொடர்பாக அமெரிக்க அரசுக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்கெனவே தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதர் நான்சி பாவெலிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புது டெல்லிக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் ஏற்கெனவே பேசியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் டெல்லிக்கு வந்த அமெரிக்க தூதரக முதன்மை துணை தூதரிடம், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மீண்டும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதுபோன்று இணையத்தை வேவுபார்த்து உளவு தகவல்களை சேகரிக்கும் பணியை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வின் தலைவர் ஜெனரல் கெய்த் பிரையான் அலெக்ஸான்டர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த நிலையில், வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக இந்தியா தனது கண்டனத்தை அந்நாட்டு தூதரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT