Published : 08 Feb 2014 09:20 AM
Last Updated : 08 Feb 2014 09:20 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை களுக்கு 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமையிலிருந்து அமல்படுத்தியது.
திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை ‘டயல் யுவர் இ.ஓ’ எனும் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தொலைபேசி மூலம் கூறும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றில் சில நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் தலைமையில் நடந்தது.
இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த நிவாஸ் என்கிற பக்தர் தொடர்பு கொண்டு, சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தமது கைக்குழந்தைகள் பாலுக்காக அழும்போது செய்வதறியாது தவிக்கின்றனர். இதற்கு தேவஸ் தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
‘இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. இனி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தைகளுக்கு தடை யின்றி 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யப்படும். இந்த திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும்’ என அதிகாரி கோபால் தெரிவித்தார். இதற்கான உத்தரவையும் அவர் உடனடியாகப் பிறப்பித்தார்.
பக்தர்களின் மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ‘அபிஷேகம் போன்ற ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்துள்ள பக்தர்கள், ஒருவேளை இறந்தால் டிக்கெட்டுகளை பரிசீலித்து பெயர் மாற்றம் செய்யப்படும். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு தரிசன அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT