Published : 23 Aug 2016 03:36 PM
Last Updated : 23 Aug 2016 03:36 PM
பஞ்சாப் மாநில போலீஸ் ஒருவர் 2 மாதங்களாக கத்திகளை விழுங்கி வந்தார். சுமார் 40 கத்திகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட பிறகு, ‘ஆன்மிக சக்தியே கத்திகளை விழுங்கக் காரணம்’ என்று கூறியுள்ளார்.
அமிர்தசரசில் மருத்துவமனை ஒன்றில் 42 வயதாகும் இவருக்கு சுமார் 5 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவருக்கு 2 வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் கூற மறுத்த அந்த போலீஸ், கூறும்போது, “நான் எதற்காக இப்படிச் செய்தேன் என்று தெரியவில்லை, ஏதோ ஆன்மீகச் சக்திதான் இதன் பின்னணியில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கியது, முதல் கத்தியை விழுங்கினேன், அதன் பிறகு அது நன்றாக இருப்பதாக உணர்ந்ததால் கத்திகளை விழுங்குவதே ஒரு பழக்கமாகிவிட்டது.” என்றார்.
2 மாதங்களாக சுமார் 40 கத்திகளை விழுங்கிய பிறகு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, ஸ்கேனில் ஒரு பெரிய கட்டி தெரிந்தது, இதற்குத்தான் அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் முதலில் கருதினர், ஆனால் மேலும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் மரப்பிடி உள்ள மடக்குக் கத்திகள் அவரது வயிற்றில் கிடப்பது தெரியவந்தது. ஒவ்வொரு கத்தியும் 7 அங்குலம் இருந்தது.
“நாங்கள் உடனேயே அவரை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம், கத்திகளை அகற்றினோம். சில கத்திகள் மடக்கப்படாமல் இருந்ததால் ரத்தப்போக்கு உள்ளுக்குள் ஏற்பட்டிருந்தது:” என்று மருத்துவர் ரஜீந்தர் ராஜன் தெரிவித்தார்.
அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் மனநல மருத்துவ மதிபீட்டுக்காக அனுப்பப்படவுள்ளார்.
“நான் கத்திகளை 2 மாதங்களாக விழுங்கி வந்தேன், அது எனக்கு தீங்கு விளைவிக்கும் என்று நான் கருதவில்லை., ஆனால் வலி ஏற்பட்டவுடன் மருத்துவமனை வந்தேன், நான் இனி கத்திகளை விழுங்க மாட்டேன். என் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி, நான் என் குடும்பத்தினருடன் சேர விரும்புகிறேன்” என்றார் அந்த போலீஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT