Last Updated : 05 Nov, 2014 11:42 AM

 

Published : 05 Nov 2014 11:42 AM
Last Updated : 05 Nov 2014 11:42 AM

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவம் சுட்டதில் இரு இளைஞர்கள் பலி: விசாரணைக்கு ஆணை; சில பகுதிகளில் 144 தடை உத்தரவு

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிர வாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் இரு இளைஞர்கள் காய மடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு பேர் உயிரிழந்தது வருத்த மளிக்கிறது. எந்த சூழ்நிலையில் அச்சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. யாரேனும் குற்றம் செய்திருந்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை, பத்காம் மாவட்டம் சட்டேர்காம் கிராமத்தில் மாருதி 800 காரில் வந்தவர்கள் மீது, ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் 53-வது பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஃபைசல் யூசுப் பட் மற்றும் மெஹ்ரஜுதீன் தார் ஆகியோர் உயிரிழந்தனர். ஷாகிர் பட், ஷாகித் நாகாஷ் ஆகிய இருவர் காயமடைந்தனர். அந்த இளைஞர்கள் ஸ்ரீநகர் மாவட்டம் நவ்காம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ராணுவம் விளக்கம்

‘நவ்காம்- புலவாமா சாலையில் வெள்ளை நிற மாருதி 800 காரில் பயங்கரவாதிகள் உலவுவதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நடமாடும் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

மாலை 5 மணிக்கு, வெள்ளை நிற மாருதி 800 கார், முதல் சோதனைச் சாவடி அருகே வந்த போது, அங்கிருந்த வீரர்கள் காரை நிறுத்த முயன்றுள்ளனர். அங்கு அந்தக் கார் நிற்கவில்லை. இரண் டாவது சோதனைச் சாவடியிலும் கார் நிற்கவில்லை.

மூன்றாவது சோதனைச் சாவடியை உடைத்து முன்னேற அந்தக் கார் முயன்றது. ஆகவே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். மருத்துவனைக்குக் கொண்டு சென்றபோது, இருவர் உயிரிழந் தனர்’ என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தொடர்பு இல்லை

அந்த இளைஞர்களுக்கு பயங் கரவாத தொடர்பு இல்லை என காவல்துறை மூத்த கண்காணிப் பாளர் அமித் குமார் தெரிவித் துள்ளார்.

காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி அப்துல் கானி பட் கூறும் போது, “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டது. விசாரணை தொடங்கியுள்ளது” என்றார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

எனவே, விசாரணைக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக உத்தரவிட வேண்டும் அல்லது மாநில அரசின் பொறுப்பில் விட்டுவிடுவது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரப் பட்டுள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

வன்முறை

இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத் தால், காஷ்மீரில் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்களின் இறுதிச் சடங்கின்போது வன்முறை நிகழ வாய்ப்பிருப்பதால், நவ்காம் உள்ளிட்ட ஸ்ரீநகரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x