Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 10 Dec 2013 12:00 AM
நாடாளுமன்றத்தின் முதல் அலுவல் நாளான திங்கள்கிழமை இரு அவைகளிலும் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஜேபிசி அறிக்கை, தெலங்கானா விவகாரம், விலைவாசி உயர்வு, முஷாபர்நகர் நிவாரண முகாம்களில் 50 குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் இரு அவைகளும் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 5-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அடுத்த நாளில் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் நாடாளுமன்றம் திங்கள்கிழமை மீண்டும் கூடியது.
ஜேபிசி அறிக்கை தாக்கல்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) அறிக்கையை அதன் தலைவர் பி.சி.சாக்கோ மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங் குற்றமற்றவர், அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாதான் பிரதமரை தவறாக வழிநடத்தினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திமுக வெளிநடப்பு
இதற்கு திமுக, பாஜக, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அவைக்குத் திரும்பிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் அவையின் மையப் பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.
பாஜக உறுப்பினர்கள் யஷ்வந்த் சின்ஹா, ஹரின் பதக், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆகியோர் ஜேபிசி அறிக்கை மோசடியானது என்று குற்றம் சாட்டினர்.
அந்த அறிக்கை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவைத் தலைவர் மீராகுமார் அனுமதி மறுத்ததால் கூச்சல், குழப்பம் அதிகமானது. கடும் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் ஜேபிசி அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனிடையே, விலைவாசி உயர்வு தொடர்பாக தாங்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இடதுசாரி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். மறுபக்கம் தெலுங்கு தேசம் உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி அவையில் குரல் எழுப்பினர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது இதே பிரச்சினைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
உத்தர பிரதேசம், முஷாபர்நகர் நிவாரண முகாம்களில் 50 குழந்தைகள் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டி பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் பிரச்சினை எழுப்பினர். இதற்குப் பொறுப் பேற்று முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி அரசு கலைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி அவையில் குரல் எழுப்பினர். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அமைதி காக்குமாறு அவைத் தலைவர் ஹமீது அன்சாரி பலமுறை கேட்டுக் கொண்டார். அதன் பின்பும் கூச்சம் குழப்பம் நீடித்ததால் மதியம் வரை அவையை அவர் ஒத்தி வைத்தார்.
பிற்பகலில் அவை கூடியதும் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தை பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் எழுப்பினர். அவையின் மையப் பகுதியில் கூடி அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT