Published : 20 Nov 2015 02:44 PM
Last Updated : 20 Nov 2015 02:44 PM

பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு: லாலு மகனுக்கு துணை முதல்வர் பதவி

பிஹார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரான நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு மகன் தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

மொத்தம் 243 உறுப்பினர் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக அணிக் கும் ஐக்கிய ஜனதா தளம் தலை மையிலான மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அந்க கூட்டணியில் இடம்பெற்ற லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 80, ஐக்கிய ஜனதா தளம் 71, காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

புதிய அரசு பதவியேற்கும் விழா பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக அல்லாத பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

ஐந்தாவது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளில் இருந்து தலா 12 பேரும் காங்கிரஸில் இருந்து 4 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

லாலு மகன் துணை முதல்வர்

கடவுள் பெயரில் இந்தியில் நிதிஷ் பதவி ஏற்றார். அவர் உள்துறை, தகவல், விளம்பரம், பொது நிர்வாகம் ஆகிய துறை களை தம் வசம் வைத்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் நிதிஷுக்கு அடுத்து பதவியேற்ற லாலு மகன் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் பட்டுள்ளது. அவர் சாலை கட்டமைப்பு, கட்டிடத்துறை ஆகிய துறைகளை வகிப்பார். லாலுவின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஐக்கிய ஜனதா தள முன்னாள் மாநிலத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன், விஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவண் குமார், ஜெய் குமார் சிங், முன்னாள் எம்பி மகேஷ்வர் ஹசாரி, கிருஷ்ண நந்தன் பிரசாத் வர்மா, சந்தோஷ் நிராலா, குர்ஷித் என்கிற பிரோஸ் அகமது ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். சைலைஸ் குமார், குமாரி மஞ்சு வர்மா, மதன் சஹ்னி, கபில்தேவ் காமத் ஆகியோர் புது முகங்கள் ஆவர்.

ஆர்ஜேடி அமைச்சர்கள்

லாலு மகன்கள் தவிர லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து அப்துல் பாரி சித்திக், அப்துல் கபூர், விஜய்பிரகாஷ் உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் மாநில தலைவர் அசோக் சவுத்ரி உள்ளிட்டோர் அமைச்சர்களாகி உள்ளனர். அரசியல் சாசனப்படி பேரவை உறுப்பினர்கள் பலத்தில் 15 சதவீதம் வரை அமைச்சர்களை நியமிக்கலாம். அதன்படி முதல் வரை சேர்த்து அதிகபட்சம் 36 பேர் இடம்பெறலாம்.

விழாவை லாலு ரசித்தார்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட வில்லை. எனவே தனது 2 மகன்களை களத்தில் இறக்கினார். முதல் முயற்சியிலேயே இருவரும் வெற்றிபெற்றனர்.

இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றதை லாலு பிரசாத், அவரது மனைவியான முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அசாம் முதல்வர் தருண் கோகோய், இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

‘இதுபோல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வந்திருப்பது இதுவரை காணாதது. நாட்டில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இப்போது மலர ஆரம்பித்துள்ளது’ என்று ஐக்கிய ஜனதா தள பிஹார் மாநில தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் தெரிவித்தார். பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழாவில் பங்கேற்றார்.

நிதிஷ் பதவியேற்பு விழாவை காண சுமார் 2 லட்சம் பேர் வந்திருந் தனர். இதற்காக மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x