Published : 10 Nov 2014 05:01 PM
Last Updated : 10 Nov 2014 05:01 PM
மத்திய ரயில்வே அமைச்சராகப் பதவியேற்றுள்ள சுரேஷ் பிரபாகர் பிரபு, பயணிகள் பாதுகாப்பு மற்றும் சேவை ஆகியவை சிறப்புக் கவனம் பெறும் என்று கூறியுள்ளார்.
"கடந்த காலங்களில் ரயில்வேயை நடத்துவதில் பல சவால்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் இன்னமும் பயன்படுத்தப்படாத ஆற்றல்கள் இந்தத் துறையில் உள்ளன” என்றார்.
பாஜக அமைச்சரவையில் முன்னதாக ரயில்வே அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, சட்டத்துறை அமைச்சராக பதவி மாற்றம் பெற்றார்.
இதனையடுத்து அமைச்சர் சுரேஷ் பிராபகர் பிரபு ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் சிவசேனாக் கட்சியிலிருந்து பாஜக-வுக்கு மாறினார்.
“ரயில்வே துறையின் நிலையில் மாற்றம் நிச்சயம் வரவேண்டும் என்று பிரதமர் முடிவெடுத்து விட்டார். எங்களது இரண்டு முக்கியமான விஷயங்கள் என்னவெனில் பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்பு ஆகியவனவாகும். குறிப்பாக பயணிகள் பாதுகாப்பு நாளுக்கு நாள் கவலையளிப்பதாகவே உள்ளது.
நாங்கள் என்ன செய்கிறோம் என்பது விரைவில் தெரியவரும். ஆகவே அறிவிப்பு எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்பதே இப்போதைக்கு எனது அறிவிப்பு.
நாட்டின் பொருளாதாரத்தில் ரயில்வே துறைக்கு முக்கிய பங்கு உள்ளது, இந்த திசையில் பணியாற்றினால், பொருளாதார முன்னேற்றத்திற்கு ரயில்வே துறையும் பங்களிப்பு செய்யும்.
மிகப்பெரிய அளவில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகளையும் நாங்கள் கவனத்தில் கொள்வோம்.” என்றார் சுரேஷ் பிரபாகர் பிரபு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT