Published : 16 Jan 2014 01:28 PM
Last Updated : 16 Jan 2014 01:28 PM
ஆம் ஆத்மி கட்சி அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிச் செல்கிறது, மக்களை ஏமாற்றுகிறது, முதல்வர் கேஜ்ரிவால் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி (39) கட்சித் தலைமை மீது சரமாரி தாக்குதல் தொடுத்துள்ளார்.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என வினோத் குமார் பின்னி நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பயன்படுத்திய பின் தூக்கி எறியும் கொள்கையை கட்சித் தலைமை பின்பற்றுகிறது. முதலில் அவர்கள், அண்ணா ஹசாரே, கிரண் பேடியை பயன்படுத்திக்கொண்டார்கள். இதுபோல் கட்சியில் பலர் தற்போது வஞ்சிக்கப்படுகின்றனர்.
விஐபி கலாச்சாரத்தை ஒழிப்பதாகக் கூறி விட்டு எல்லா அமைச்சர்களும் கவர்ச்சிகரமான எண்களை தங்கள் வாகனங்களில் பயன்படுத்துகின்றனர்.
மூடிய அறைக்குள் 4 5 பேர் முடிவுகளை எடுக்கிறார்கள். கேஜ்ரிவால் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். மாற்றுக் கருத்து கூறுவோரை அவர் கடுமையாக சத்தம் போடுகிறார்.
மக்களவை தேர்தலில் போட்டியிட நான் 'சீட்' கேட்டதாக கேஜ்ரிவால் கூறுவது முழு பொய்.
மக்களை அரசு ஏமாற்றுகிறது ஆம் ஆத்மி அரசு டெல்லிவாசிகளை ஏமாற்றுகிறது. மின்சாரம் மற்றும் நீரின் பயன் சிலருக்கு மட்டுமே செல்கிறது. 700 லிட்டர் நீர் எவ்வித நிபந்தனையும் இன்றி இலவசமாக தரப்படும் என தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் பயன்படுத்து வோரிடம் தற்போது முழு தொகையும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் மின்சாரக் கட்டணம் அனைவருக்கும் பாதியாக குறையும் என பிரச்சாரம் செய்துவிட்டு, தற்போது 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மட்டும் அரசு மானியம் அளிக்கும் என்று கூறுகிறார்கள்.
15 நாள்களில் சிறப்பு சட்டசபை கூட்டி ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதாக கூறினர். 18 நாளாகியும் அதை செய்யவில்லை. உண்ணாவிரதம் இருப்பேன் வரும் 26-ம் தேதிக்குள் இம்மசோதாவை நிறைவேற்றா விட்டால் இந்த அரசை எதிர்த்து 27 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பேன். நான் கட்சியின் உண்மையான தொண்டன். கட்சியை விட்டு விலக மாட்டேன் என்றார் பின்னி.
டெல்லியில் டென்மார்க் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பின்னி குறிப்பிடுகையில், டெல்லியில் 2012 டிசம்பரில் மருத்துவ மாணவி ஒருவர் பஸ்ஸில் பலாத்காரம் செய்யப்பட்டபோது, அப்போதைய ஆளும்கட்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி நடத்தியது. தற்போது பெண்களை பாதுகாக்க இவர்கள் என்ன செய்துள்ளார்கள்? என கேள்வி எழுப்பினார்.
ஆம் ஆத்மி மறுப்பு
ஆம் ஆத்மி கட்சித் தலைமை மீது அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி கூறிய புகார்களுக்கு, கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்தர் யாதவ், சஞ்சய்சிங், அசுதோஷ் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், கட்சித் தலைமை மீதான புகார்களை கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்னி ஒருமுறை கூட எழுப்பியதில்லை. இதை அவர் கட்சியிலேயே கூறி விளக்கம் பெற்றிருக்கலாம்.
இப்புகார்கள் எதிர்கட்சிகள் எழுதிக்கொடுத்தவைபோல் உள்ளன. இந்த புகார்களைத் தான் பாஜக தலைவர் ஹர்ஷவர்தன் சட்டமன்றத்திலும் வெளியிலும் கூறி வருகிறார்.
பின்னி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. இது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி 700 லிட்டர் தண்ணீரை இலவசமாக தந்துள்ளோம். அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனையை பின்னி சரியாகப் படிக்கவில்லைபோல.
முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்காமல் இருப்பதாக பின்னி புகார் கூறியுள்ளார். குறிப்பிட்ட சிலரை மட்டும் விசாரிக்காமல், கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களையும் விசாரிக்க இருக்கிறோம். அதற்கு சில நாள்களாகும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT