Published : 24 Nov 2014 07:20 PM
Last Updated : 24 Nov 2014 07:20 PM
முத்த போராட்டத்தை தடுக்க முயல்வோர் மீது கடுமைடான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொச்சி, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னையை தொடர்ந்து பெங்களூருவில் வரும் 22-ம் தேதி முத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு கர்நாடகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டம் நடந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என கருதி அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே வரும் 30-ஆம் தேதி முத்த போராட்டம் நடத்த பெங்களூரு காவல் ஆணையத்திடம் மீண்டும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசினார். அப்போது, "சில அமைப்பினர் முத்த போராட்டத்துக்காக மீண்டும் அனுமதி கோரியுள்ளனர். அவர்களது கோரிக்கைக்கு இரண்டு நாட்களில் பதில் அளிக்கப்படும். அவர்களிடம் நாங்கள் போராட்டத்துக்கான நோக்கம் மற்றும் அதற்கான விவரத்தை அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்.
இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட யாருக்கும் உரிமை இல்லை. அப்படி ஏதேனும் நடைபெற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்த போராட்டம் குறித்து நிலவர அறிக்கையை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடிக்கப்படும்" என்றார்.
இதனிடையே கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறையை ஏற்க முடியாது. அப்படி எதாவது சம்பவங்கள் ஏற்பட்டால் அது மாநிலத்தின் மேன்மையை பாதிக்க செய்யும். இருப்பினும் இந்த முத்த போராட்டம் குறித்த இறுதி முடிவை முதல்வர் சித்தராமையா மேற்கொள்வார் என்று கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT