Published : 13 Oct 2013 12:28 PM
Last Updated : 13 Oct 2013 12:28 PM

ராமர் ஆலய மறுகட்டமைப்பு: உ.பி. அரசின் கடிதத்தால் சர்ச்சை

குஜராத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஆலய விவகாரத்தில் பின்பற்றப்பட்டதுபோல் அயோத்தியிலும் ராமர் ஆலயத்தை மறுகட்டமைப்பு செய்வது குறித்து விவாதிக்க கூட்டம் நடத்தப்பட உள்ளதாக உத்தரப் பிரதேச உள்துறை செயலர் எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடிதத்தில் தவறு உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப் பட்டுள்ளது. இளநிலை அதிகாரிகள் நிலையில் தவறு நிகழ்ந்துள்ளது.

இதற்கு தானே பொறுப்பேற்பதாக தெரிவித்த உள்துறையின் முதன்மைச் செயலர் ஆர்.எம்.ஸ்ரீவத்சவா, நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

இது பற்றி நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது: இந்த துறையின் சார்பில் அக்டோபர் 9ம் தேதி வெளியான கடிதத்தில் பிழைகள் உள்ளன. விஎச்பி சார்பில் அக்டோபர் 18ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சி தொடர்பான புலனாய்வு தகவல்களும் உள்ளன. ரகசியமாக இருக்க வேண்டிய அந்த தகவல் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கடிதத்தில் உள்ள வார்த்தைகளில் பிழை உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி யார் காரணம் என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த கடிதத்தை வெளியிட்ட உள்துறைச் செயலர் சர்வேஷ் குமார் மிஸ்ரா, நிருபர்கள் கூட்டத்தில் பங்கேற்றபோதும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முன்வரவில்லை. கடிதம் பிழையானது. அதில் உள்ளவற்றை அர சின் கொள்கை முடிவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வாரம் முழுக்க அதிகாரிகள் பணியாற்றுவதால் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார் ஸ்ரீவத்சவா.

தகுந்த பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு இந்த பிரச்சினை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் இந்த விவகாரம் தெரிந்திருக்கும். அக்டோபர் 14ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாநில காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சோமநாதர் ஆலயத்தில் மேற் கொண்டது போன்று அயோத்தியில் ராமர் ஆலயத்தை மறுகட்டமைப்பு செய்ய மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று செயலர் மிஸ்ரா அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் மாநில காவல் துறைத் தலைவர், ஐஜி (ரயில்வே, லக்னௌ, ஐஜி லக்னௌ, ஐஜி (பைசாபாத்) ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அனுப்பப் பட்டது.

இந்த விவகாரத்தை எழுப்பி கடுமையாக சாடியுள்ளது பாஜக. இந்த கடிதம் காங்கிரஸ், சமாஜ வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டு சதியாகும், இந்த நாடகத்தால் 2014 பொதுத் தேர்தலில் இந்த சக்திகள் வென்றுவிட முடியாது என்று கான்பூரில் பேட்டி அளித்த பாஜக தேசிய துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். பி.டி.ஐ. அக்டோபர் 14ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாநில காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x