Published : 06 Nov 2014 09:17 AM
Last Updated : 06 Nov 2014 09:17 AM
ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல் வருமான மாயாவதி அறிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஹரியாணாவிலும், மகாராஷ்டிராவிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிட்டது. அதேபோலவே ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிடுவோம்.
மகாராஷ்டிரா, ஹரியாணாவில் எங்கள் கட்சியை போலவே பிற கட்சிகளும் மோசமான தோல்வி அடைந்தன. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தந்திரமான பேச்சுதான் காரணம்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டை பதவிக்கு வந்த குறுகிய காலத்திலேயே எடை போட வேண்டாம் என அவர் விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் இணங்கிவிட்டனர். ஆனால் உண்மை நிலை விரைவில் தெரியவரும்.
கங்கை நதியை சுத்தம் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என்று பாஜகவினர் கூறினர். ஆனால் இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை” என்றார். விலைவாசி உயர்வு மற்றும் கருப்புப் பண விவகாரம் தொடர்பாக பாஜக அரசின் செயல் பாடுகளை மாயாவதி விமர்சித்தார்.
எம்.பி. மீது குற்றச்சாட்டு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அகிலேஷ் தாஸ், கடந்த 3-ம் தேதி கட்சியிலிருந்து விலகினார். அவரது எம்.பி. பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிகிறது.
இந்நிலையில் அகிலேஷ் தாஸ் தன்னை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பகுஜன் சமாஜ் சார்பில் தேர்வுசெய்ய ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்று மாயாவதி குற்றம் சாட்டினார்.
மாயாவதி மேலும் கூறும்போது, “உ.பி.யில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT