Published : 15 Nov 2014 12:47 PM
Last Updated : 15 Nov 2014 12:47 PM
சத்தீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபோது அப்பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து விஷத்தன்மை கொண்டதாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கரின் பிலாஸ்ப்பூரில் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உடல்நலக்குறைவால் அப்பாவிப் பெண்கள் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற 48 பேர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், அறுவை சிகிச்சைக்கு முன்னர் பெண்களுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து விஷத்தன்மை கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எலி விஷம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜிங்க் பாஸ்ஃபைட் (Zinc phosphide) அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய மருந்துகளில் இருந்தது என்று சத்தீஸ்கர் சுகாதார துறை நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த விவகாரத்தில் ஒருநபர் விசாரணை நடத்தவும் அது தொடர்பான அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் நீதிபதி அனிடியா ஜா-வை நியமித்து சத்தீஸ்கர் அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
இதனிடையே கருத்தடை முகாமுக்கு மருந்துகளை தயாரித்து வழங்கிய மஹாவர் பார்மா நிறுவனம், ஏற்கனவே தரக்குறைவான மருந்துகளை வழங்கி இருப்பதாகவும், அந்த நிறுவனம் மீது ஏற்கனவே 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுபோன்று முறைகேடுகளில் சிக்கி இருக்கும் நிறுவனத்திடமிருந்து மருந்துகளை வாங்கியது தவறு என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் ஷைலேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT