Published : 25 Nov 2014 02:56 PM
Last Updated : 25 Nov 2014 02:56 PM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் அசூர் என்ற பழங்குடியின மக்களின் சார்பாக முதன்முறையாக விமல் அசுர் என்ற 29 வயது இளம் வேட்பாளர் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரது வீட்டில் இருக்கும் 7 பேருக்கு இவரது உழைப்பு ஒன்றே வாழ்வாதாரம். அதிகாரம் படைத்தவர்களும் அதிக பணபலம் பெற்றவர்களும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு போட்டியிடும் நிலையில், தேர்தல் செலவுகளுக்காக தனது விவசாய நிலத்தை ரூ.40,000-க்கு விற்றுள்ளார் விமல் அசுர்.
முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் பாபு லால் மராண்டியின் விகாஸ் மோர்ச்சா பிரஜந்திரிக் கட்சியின் சார்பில் கும்லா மாவட்டத்தின் பிஷன்ப்பூர் தொகுதியில் அசுர் பழங்குடியின மக்களின் பிரதிநிதியாக முதல் முறையாக இவர் நிறுத்தபட்டுள்ளார்.
பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தமாக அசுர் பழங்குடியினர், அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜார்க்கண்டில் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியின மக்கள் 9 பிரிவுகளாக இருக்கின்றனர். இவர்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 22,000. ஆனால் இவர்களுக்கான பிரச்சினைகள் ஏராளம். அவை அனைத்துமே முற்றிலும் அத்தியாவசிய தேவைகள் என்ற நிலைக்கு கீழ் உள்ளவை தான்.
தான் வளர்ந்து வந்திருக்கும் பழங்குடியின மக்களுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதன் மூலம் தன் மக்களுக்காக ஏதேனும் வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு மதிப்பு சுமார் ரூ.24 லட்சம் என்பது விமல் அசுருக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக இருந்தது. இதனை அடுத்து தனது பிரச்சார செலவுக்காக தான் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்த ரூ.40,000-ஐ செலவிட்டுள்ளார். பழங்குடியின மக்களால் தானும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் விமல் அசுர் இருக்கிறார்.
ஜார்க்கண்டில் விஜய தசமி பண்டிகையின் முடிவில் நடத்தப்படும் திருவிழாவின்போது, ராமரால் அசுர வேடத்தில் வருணிக்கப்படும் ராவணன் வீழ்த்தப்படுவார். இந்த ஐதீகம் நடைபெறும் போது அசுர் பழங்குடியின மக்கள் மீதும் ஐதீகத்தின்படி தாக்குதல் நடந்துவிடும் என்ற அச்சத்தில் கிராமத்தில் வாழும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியின மக்களான அசுர் இன மக்கள் ஓடி சென்று தங்களது வீட்டுக்குள் மறைந்து கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட நம்பிக்கை ஜார்க்கண்டில் இன்னும் தொடர்கிறது. இவ்வாறு பழங்குடியின மக்கள் வீட்டுக்குள் மறைந்துகொள்ளும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில், சாதாரண நிலையிலிருந்து பிரதமராக உயர்ந்திருக்கும் நரேந்திர மோடியை கண்டு விமல் அசுர் தனது மக்களுக்காக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற குறிக்கோளோடு இந்த தேர்தலை சந்திக்கிறார்.
"அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்து தர வேண்டும். பசியை தீர்க்க வேண்டும்.
அவர்களுக்கு தண்ணீர், உணவு, படிப்பு ஆகியவற்றை அளித்து பசியின்மை, வறுமை ஒழிப்பு, கல்வி இல்லாமை போன்ற தனது சமூகத்தின் பிரச்சினைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்பதே விமல் அசுரின் தற்போதைய உறுதியான நோக்கமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT