Published : 15 Nov 2014 12:32 PM
Last Updated : 15 Nov 2014 12:32 PM
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: பெட்ரோல், டீசல் மீது ஏற்கெனவே கடுமையாக வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இவற்றின் சில்லரை விற்பனை விலையில் வரி பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, மீண்டும் வரியை உயர்த்தி இருப்பதில் எவ்வித நியாயமும் இல்லை.
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விழ்ச்சி யடைந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதால், பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யாமல் வரியை உயர்த்திவிட்டு, விலைக் குறைப்பை கைவிட்டுள்ளது. அத்துடன் வரி உயர்வால் சில்லரை விற்பனை விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்று மக்களுக்கு தவறான தகவலை தருகிறது. இதனால் இப்போது விலை உயரவில்லை என்றாலும், வரும் காலத்தில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
எனவே, இப்போதுள்ள வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தர்ணா போராட்டம்
இந்தப் பிரச்சினை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மோடி அரசு நீர்த்துப்போகச் செய்வதற்கு எதிராக ஏற்கனவே ஒரு நாள் தர்ணா போராட்டத்தை இடதுசாரிகள் அறிவித்துள்ளன. இதை, டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 26-ம் தேதி காலை 11.00 மணிக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT