Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
டெல்லியில் டிசம்பர் 16 பலாத்கார வழக்கில், குற்றவாளிகளை உடனே தூக்கிலிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கூறினர்.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, வெளியே வீசப்பட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பம் நிகழ்ந்து நேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:
எங்கள் பெண் இறந்து போனதாகவே எங்களால் நினைக்க முடியவில்லை. அவள் இன்னும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைக்கிறோம்.
அந்த அளவுக்கு அவளை நாங்கள் நேசித்தோம். அவர் பாதிக்கப்பட்ட நாளில் தொலைந்து போன எங்களின் நிம்மதி, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என தீர்ப்பளித்த பின்புதான் கிடைத்தது.
ஆனால், மேல் முறையீடு என்ற பெயரில் அதை நிறைவேற்ற பல வருடங்கள் ஆகிவிடும் போல் உள்ளது. இந்த முறையை மாற்றி உடனடியாக தீர்ப்பை அமல்படுத்தும் முறையை கொண்டு வர வேண்டும்.
குற்றவாளிகளை காப்பதற்காக, “இது காந்தி பிறந்த தேசம், அகிம்சையை வலியுறுத்திய அவரது நாட்டில் தூக்கு தண்டனை கூடாது” என நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
ஆனால், இதே தேசத்தில்தான் நேதாஜியும் பிறந்தார். இவர் போல் பலரும் சேர்ந்ததால்தான் சுதந்திரம் கிடைத்தது. இது அடுத்தவர் தோளில் துப்பாக்கியை வைத்து தனது எதிரியை சுடும் முயற்சி.
குற்றவாளிகள் விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோது அவர்களின் முகத்தில் வருத்தமான உணர்வுகளையே பார்க்க முடியவில்லை. ஆனால், தீர்ப்பு கொடுத்தவுடன் முகம்
மாறி கதறி அழுததை பார்க்க முடிந்தது. இது எதைக் காட்டுகிறது என்பதை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த வழக்கில் மைனர் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை மட்டுமே கொடுத்துள்ளனர். சிறிய தண்டனைக்குப் பிறகு சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வெளியே வருபவர்களில் எத்தனை பேர் திருந்தி இருக்கிறார்கள் என்று அரசு கணக்கெடுக்க வேண்டும். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கலாம்.
என் பெண்ணுக்காக, பொதுமக்களும் ஊடகங்களும் சேர்ந்து போராடியதால் நேர்மையான தீர்ப்பு விரைந்து கிடைத்துள்ளது என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT