Published : 06 Jun 2017 09:42 AM
Last Updated : 06 Jun 2017 09:42 AM
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) சீர்திருத்தியே தீருவது என்று நல்ல முயற்சியில் உச்ச நீதிமன்றம் களத்தில் இறங்கியது. ஆனால் அது ஏன் இப்போது அரை வேக்காட்டுத்தனமான செயல்போலத் தெரிகிறது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு தலையிட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அறுவைச் சிகிச்சை மேஜையில் உடலை வெட்டித் திறந்துபோட்டுவிட்டு, பிறகு என்ன செய்வது என்று புரியாமல், கிடத்தப்பட்ட நோயாளி போல இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திணறுகிறது!
நீதிபதிகள், கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், நவீன வரலாற்றாசிரியர் என்று மிகச் சிறந்த அறிவாளிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வாகக் குழுவை நியமித்த பிறகும் மேற்கொண்டு எப்படிச் செயல்படுவது என்று புரியாமல் திகைக்கும் வகையில் நிலைமை மோசமானதேன்?
இந்திய கிரிக்கெட் நிலை இப்படி ஆனதற்கு யார் ‘முதல் காரணம்’ என்று ஆராய்வதும் புத்திசாலித்தனமல்ல; ஆனால் ஆட்டக்காரர்களும் மேலாளரும் பிளவுபட்டு நிற்கின்றனர். ராமசந்திர குஹா பதவியை ராஜிநாமா செய்திருப்பதுடன் சில விவகாரங்களை அம்பலப்படுத்தியிருப்பதற்காக நன்றி சொல்ல வேண்டும், அவருடைய கருத்துடன் நமக்கு முழு உடன்பாடு இல்லாவிட்டாலும்!
கிரிக்கெட்டில் நீதித்துறைத் தலையீடு 4 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியது. ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்ததாக வந்த புகாரை அடுத்து அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 உறுப்பினர் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. 12 மாத கடினமான ஆய்வுகளுக்குப் பிறகு அது அளித்த அறிக்கை, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என்றது. 2016 அக்டோபருக்குள் இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. அது அமல்படுத்தப்படாததால் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர், செயலாளர் பதவியிலிருந்து அஜய் ஷிர்கே நீக்கப்பட்டனர். பிறகு லோதா குழுவின் பரிந்துரைப்படி நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டது. சீர்திருத்தங்களை அமல்படுத்தவும் வாரியத்தை நிர்வகிக்கவும் இடைக்கால ஏற்பாடாகத்தான் இக்குழு நியமிக்கப்பட்டது.
நிர்வாகக்குழுத் தலைவராக முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் தேர்வு செய்யப்பட்டார். ஐ.டி.எஃப்.சி. லிமிடெட் என்ற சக்திவாய்ந்த நிதி நிறுவனத் தலைமை நிர்வாகியும் மேலாண் இயக்குநருமான விக்ரம் லிமாயி, கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி, வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா ஆகியோரும் உறுப்பினர்களாக்கப்பட்டனர்.
கிரிக்கெட் நிர்வாகக் குழு கடந்த 4 மாதங் களாக முழு அதிகாரத்துடன் செயல்படவில்லை; தர்மசாலாவில் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை நடத்துவது போன்ற சாதாரணப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூட உச்ச நீதிமன்றத்தில் ‘கிரிக்கெட் பெஞ்ச்’ உடனுக்குடன் கூடுகிறது! டெல்லியில் உயர் அந்தஸ்து அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஓய்வுக் காலத்துக்குப் பிறகு கிடைக்கும் இதைப் போன்ற பசையுள்ள பதவிகளை அவ்வளவு லேசில் விட்டுவிட மாட்டார்கள்.
இதற்கிடையில் உலக அரங்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்தியா மண்டியிட்டுப் பணிந்திருக்கிறது. கவுன்சிலின் அதிகாரம், வருவாய்ப் பகிர்வு, வாக்களிப்பு முறைமை தொடர்பாக ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியாவை இந்த நேரம் பார்த்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்றவைத் தோற்கடித்துள்ளன. இந்தியா சண்டையிட்டுத் தோற்கவில்லை, இந்திய கிரிக்கெட் சங்கம் சண்டையிடவே, இடைக்கால நிர்வாகிகள் குழு அனுமதிக்கவில்லை! இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது இடைக்காலக் குழு தன்னுடைய முழு அதிகாரத்தைச் செலுத்தி வருகிறது.
நம்முடைய கிரிக்கெட் அணியின் தலைவரும் பயிற்சியாளரும் (கோச்) கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு ஆள் தேவை என்று இந்த நேரத்தில் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தக் குழுவின் ஓர் உறுப்பினர் தன்னுடைய சகாக்களுடைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். விராட் கோலி, தோனி ஆகியோரின் ஆட்டத் திறமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
குஹாவின் கடிதம் நம்முடைய கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடைய முரண் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேலும் தெளிவாக வெளிப் படுத்தியிருக்கிறது. நம்முடைய நீதித்துறை தனது அளவுகடந்த ஆர்வம் காரணமாக நிதிச் சந்தைகள், வங்கித்துறை, அதிகார வர்க்கம்-பெருநிறுவனக் கூட்டு போன்றவை தொடர்பாக தலையிட்டு சீர்திருத்திய காலங்களில் விரும்பத்தகாத பல பக்க விளைவுகளே ஏற்பட்டன என்பது நம்முடைய அனுபவம்.
வங்கி வாரிய பீரோ (பி.பி.பி.) என்ற சக்திவாய்ந்த அமைப்பின் தலைவர் பதவியை வகிக்கிறார் வினோத் ராய். இந்த பீரோ அரசுத்துறை வங்கிகளைச் சீரமைக்கிறது. ஐ.டி.எஃப்.சி. என்பது அரசு வங்கிகளுடன் போட்டியிடும் தனி நிதியமைப்பு. அதன் தலைமை நிர்வாகியான லிமாயி கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் ராய்க்கு உதவி செய்ய நியமிக்கப்படுகிறார். லிமாயி தான், தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாகியும். அங்குதான் இந்தியத் தொழில் நிறுவனங்களின் 80% பங்குகள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இந்த அமைப்புக்கு பல மாதங்களாக தலைவரே நியமிக்கப்படவில்லை. அத்துடன் வர்த்தகத்தில் நடந்த முறைகேடுகளுக்காகவும் தில்லுமுல்லுகளுக்காகவும் 3 நிலைகளில் நுண்ணறிவுப் புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்படுகிறது. எனவே அவரைச் சந்தையின் நெறியாளராக ஏற்க ‘செபி’ மறுத்துவிடும். அவர் நெறியாளராக விரும்பினால் முதலில் கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை விட்டு விலக வேண்டும். ‘செபி’ அமைப்பின் நெஞ்சுரத்தை இதற்காகப் பாராட்டுவது அவசியம்.
ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் புரவலர் நிறுவனங்கள், ‘செபி’ அமைப்பில்தான் பட்டியலிடப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. எனவே லிமாயி ஒன்றுக்கொன்று முரணான இரு வேறு ஆதாயப் பதவிகளில் இருப்பது சரியா? பங்குச் சந்தையின் தலைமை நிர்வாகத்துக்கே நேரம் போதாதபோது, நிறைய நேரம் தேவைப்படும் கிரிக்கெட் வாரிய நிர்வாகப் பதவியைத் தொடர்ந்து வகிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.
கிரிக்கெட் நிர்வாகத்தைச் சீரமைக்க உச்ச நீதிமன்றம் தேர்வு செய்த ஆட்கள் வகிக்கும் பிற பதவிகளால், ‘நலன்-முரண்’ (இரட்டை ஆதாயம்) என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் தொடர்பு, அதிகாரம், பணம் என்ற கூட்டு வேறுவிதத்தில் வலுப்பெறப் போகிறது. கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற உடனேயே வினோத் ராய் கூறினார், “நான் கிரிக்கெட்டில் வரும் ‘நைட் வாட்ச்மேன்’ போல; குறிப்பிட்ட காலம் பணி செய்த பிறகு விலகிவிடுவேன்” என்று. அதிகாரம் என்பது எப்போதும் போதையைத் தரவல்லது; கிரிக்கெட் அதிகாரம் அந்த போதைத் தெளிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளக்கூடியது.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். | தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT