Published : 13 Mar 2014 03:35 PM
Last Updated : 13 Mar 2014 03:35 PM
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
2012 டிசம்பர் 16-ம் தேதி இரவில் டெல்லி புறநகர்ப் பகுதியில் 23 வயதான பிசியோதெரபி மாணவியும் அவரது 28 வயது ஆண் நண்பரும் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் டிரைவர் அழைத்ததன் பேரில் இருவரும் பஸ்ஸில் ஏறினர்.
பஸ்ஸில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 6 பேர் கும்பல், மருத்துவ மாணவியிடம் அத்துமீறி நடந்தனர். அதை தடுக்க முயன்ற ஆண் நண்பரை இரும்பு கம்பியால் தாக்கினர். அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் 6 பேரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்தனர். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு இருவரையும் புறநகர்ப் பகுதியில் தூக்கி யெறிந்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
நள்ளிரவில் சாலையோரம் உயிருக்குப் போராடிய இருவரையும் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலத்த காயமடைந்த மருத்துவ மாணவிக்கு டெல்லி மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு 3 நாட்கள் உயிருக்குப் போராடிய அவர் டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அக்சய் தாகுர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் மற்றும் 17 வயது சிறுவனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம்சிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
17 வயது சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற 4 பேர் மீதான வழக்கு டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 8 மாத விசாரணைக்குப் பிறகு அவர்கள் 4 பேருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ரேவா கேதர்பால், பிரதிபா ராணி ஆகியோர் விசாரித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விரைவு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்தனர்.
2012 டிசம்பர் 16 சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க ரூ.1000 கோடியில் நிர்பயா நிதியத்தை மத்திய அரசு தொடங்கியது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இந்த நிதியத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதி வர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகளின்படி கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
சிறந்த தீர்ப்பு: மாணவியின் தந்தை பேட்டி:
தீர்ப்பு குறித்து மாணவியின் தந்தை ‘தி இந்து’விடம் கூறியதாவது: தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் எங்களைபோல் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் வலி புரியும்.
இந்த தீர்ப்பு எங்களுக்கு மட்டும் அல்ல, நம் நாடு, அனைத்து சமூகத்துக்கும் ஒரு சிறந்த தீர்ப்பு. இதை பார்த்து பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ய யாருக்கும் துணிவு வராது.
18 வயதுக்கு குறைவானவர் என சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் பட்டவரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். இருதரப்பு விவாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எங்கள் மகளின் பெயரில் இரு அறக்கட்டளைகளை தொடங்க இருக்கிறோம். இதன் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சமூகம், குடும்பங்களால் ஒதுக்கப்பட்டு வாழ்பவர்களுக்கு உதவி செய்வோம்.
குறிப்பாக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக அறக்கட்டளை உதவும். நாடு முழுவதும் உள்ள பெண் களுக்கு அறக்கட்டளை சார்பில் சேவை செய்வோம் என்றார். தீர்ப்பு குறித்து மாணவியின் தாயார் நிருபர்களிடம் பேசியபோது, நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. 4 பேரையும் தூக்கிலிடும் நாளில்தான் எங்கள் மனம் நிம்மதி அடையும் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT