

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் தாம் பேசத் தயாராக இருப்பதாகவும், அவர் தனக்கு எதிரி அல்ல என்றும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அன்னா ஹசாரேவுக்கும், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே பிரச்சினை வலுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஹசாரேவின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக, மகாராஷ்டிராவின் ரலேகான் சித்தியில் செய்தியாளர்களுடன் பேசிய அன்னா ஹசாரே, "நாங்கள் எதிரிகள் அல்ல... அவர் என்னுடன் பேச விரும்புகிறாரா என எனக்குத் தெரியாது. அரவிந்த் கேஜ்ரிவாலுடன் நான் பேசத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
முன்னதாக, டெல்லி தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி எந்தக் காரணத்தைக் கொண்டும் தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியதாக வெளியான செய்தியால் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து அன்னா ஹசாரே விளக்கும்போது, "ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கான செயல்பாடுகளின்போது, நிதி சார்ந்த நடவடிக்கைக்காக எனது பெயரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டன. அவை தொடர்பாகவே விளக்கம் கேட்டிருந்தேன்.
என்னுடைய பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று உணர்ந்ததால், விளக்கத்தைக் கேட்பதற்காக கடிதம் எழுதினேன். பணத்தின் மீது எனக்கு ஆர்வம் இல்லை. என் பெயர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் மட்டும் கவனத்துடன் இருக்கிறேன்" என்றார்.
மேலும், எந்த அரசியல் கட்சிக்கும் தேர்தலுக்காக ஒருபோதும் பிரசாரம் செய்யப்போவதில்லை என்று அன்னா ஹசாரே திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனிடையே, அன்னா ஹசாரேவுடன் தான் பேச பல முறை முயற்சித்தாகவும், ஆனால் இடையில் உள்ளவர்கள் தன்னை அனுமதிக்க வில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழலுக்கு எதிரான இயக்கத்துக்காகத் திரட்டப்பட்ட நிதியை தேர்தல்களுக்குப் பயன்படுத்தவில்லை என்றும் அன்னா ஹசாரேவிடம் தாம் மீண்டும் விளக்கியதாக அவர் கூறியுள்ளார்.