Published : 10 Mar 2014 07:57 PM
Last Updated : 10 Mar 2014 07:57 PM
நாட்டின் மூலை முடுக்குகளிலும் நடக்கும் சுவையான, வித்தியாசமான மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்களை ஆதாரமாக வைத்து திரைப்படங்களை வெளியிடுவதில் எப்போதுமே பாலிவுட் முன்னணியில் இருக்கும். அந்த வகையில், மாதிரி தீட்சித் நடித்து வெள்ளிக்கிழமை வெளியாகி உள்ளது 'குலாப் கேங்'. இந்த படம் வெளியாக மூலக் காரணமாக இருந்தவர்கள் குறித்த செய்திக் கட்டுரை இது.
உத்தரப் பிரதேசத்தில் பாந்தா, ஜலோன், ஜான்சி, ஹமீர்பூர், சித்ரகுட், மஹோபா, மற்றும் லலித்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி புண்தில்கண்ட். சில வருடங்களுக்கு முன்பு வரை சம்பல் கொள்ளைக்காரர்கள் வாழும் முக்கியப் பகுதியான இதன், எல்லைகளில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களும் அமைந்துள்ளன.
மிகவும் வறட்சிப் பகுதியான இங்கு வாழும் மக்களின் கல்வித் தரம் சாதாரணமாகக் கூட இல்லை. பெரிய தொழிற்சாலைகளும் இன்றி, வேலையில்லாத் திண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. தேர்தல் சமயம் தவிர, அரசியல்வாதிகளின் புறக்கணிக்கப்பட்ட பகுதி எனப் புண்தில்கண்டை கூறலாம். இங்கு ரோஸ் நிறச் சேலைகளுடன், கம்புகளை ஏந்தி கும்பலாக செல்லும் பெண்கள் குழுவை 'குலாபி கேங்' என அழைக்கிறார்கள்.
இவர்கள், காசுக்காக மனைவியை தொல்லை கொடுக்கும் குடிகாரக் கணவன், வரதட்சணை கொடுமை செய்பவர்கள், மணமுடிக்காமல் காதலுடன் கைகழுவ முயலும் காதலர்கள் என உட்பட பல குடும்பப் பிரச்சினைகளில் தலையிட்டு முடித்து வைக்கிறார்கள்.
இத்துடன், அரசு சான்றிதழ்களுக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், அறிவிக்கப்பட்ட அரசு நிவாரண உதவி கிடைப்பதற்கு உள்ள தடைகள், புகார் செய்தும் வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீதான புகார்கள் உட்பட அனைத்தையும் குலாபி கேங் பெண்களிடம் புகார்கள் வந்தால் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராட்டங்களில் இறங்கி விடுகிறார்கள்.
இதற்காக, பிரச்சினைகளுக்கு ஏற்றபடி சுமார் ஐந்து முதல் ஐந்நூறு எண்ணிக்கையிலான பெண்கள் ரோஸ் நிறச் சேலைகள் அணிந்து நீண்ட கம்புகளுடன் ஆஜராகி விடுகிறார்கள். இவர்கள் போடும் கோஷங்களை தாங்காமல் முன்னே இருப்பவர் அரசு அதிகாரியானாலும் தலைவணங்க வேண்டியதாகி விடுகிறது.
சுமார் 15 வருடங்களாக உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துவிட்ட இந்த குலாபி கேங்கின் நிறுவனர் மற்றும் தலைவி சம்பத் பால். 52 வயதான இவர்தான் குலாபி கேங்கின் தலைமை கமாண்டர். அவரை உபியின் பாந்தாவிலிருந்து சுமார் 35 கி.மீ தூரமுள்ள அத்ரா எனும் சிறிய ஊரில் உள்ளது குலாபி கேங்கின் தலைமை அலுவலகம்.
'12 வயதில் மணமுடித்த நான், துவக்கத்தில் ஒரு சராசரி கிராமத்து பெண்ணாக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கு அடங்கி நடந்து வந்தேன். இது ஒரு கட்டத்திற்கு பின் மாறி எனது போராட்டக் குணம் வெளிப்படத் துவங்கியது. எனது கிராமத்து பெண்களுக்கானப் பிரச்சனைகளை கையில் எடுத்து தட்டிக் கேட்டேன்.
அப்போது ஒரு தலித் விட்டில் நான் விருந்து உண்ண வேண்டியதாயிற்று. இதை கேள்விப்பட்ட என் மாமியார் வீட்டார், என்னை வீட்டை விட்டு தனியாக ஒதுக்கி வைத்தனர். ஆனால், எனது கணவர் ராம்பிரசாத் பால் எனக்கு பெரும் ஆதரவாக இருந்து தைரியம் கொடுத்தார். இதற்கு பெண்கள் சுயமாக சம்பாதிப்பதே விடிவாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இதற்காக, அரசு உதவிகளின் மூலம் பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதில் முனைந்தேன். அங்கும் லஞ்ச, வாவண்யம் தலை விரித்தாடியது. அதற்கும் ஒரு முடிவு கட்டுவது எப்படி என வந்த யோசனையால் பெண்களை ஒன்றுபடுத்தி போராடுவது என முடிவு எடுத்தேன். இதற்கு ஒரு அடையாளம் தேவை என்பதற்காக ஒரே நிறமாக ரோஸ் நிறச் சேலை அணிந்து போராடுவது என முடிவு செய்தேன்' என வரலாற்று சுருக்கம் தருகிறார் சம்பத் பால்.
ஒருமுறை, அத்தரியின் முக்கிய சாலை மோசமான நிலையில் இருந்தது. இதில், சைக்கிளிலும் செல்ல முடியாத நிலை. இதை சரிசெய்ய, ரோஸ் நிறச் சேலைகள் அணிந்தபடி மாவட்ட கலெக்டரிடம் நூறு பெண்களுடன் சென்றிருகிறார் சம்பத் பால். அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க நேரில் வந்து பார்த்த கலெக்டர், சாலையை உடனடியாக சரி செய்வதாக உறுதி கூறியுள்ளார்.
இதற்கு, தலைநகர் லக்னோவில் இருந்த உயர் அதிகாரிகள், கலெக்டரை சாலை போட விடாமல் தடுத்தார்களாம். இதை எதிர்த்து அந்த சாலை முழுவதும் நெல்லின் நாத்துகளை வயலில் இருந்து பிடுங்கி வந்து சாலையில் நட்டு போராடினார் சம்பத் பால். இதைக் கண்டு, நடுங்கி போன உயர் அதிகாரிகள் ஒரே வாரத்தில் சாலையை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இன்னொரு முறை, ரேஷன் கடையின் உணவு பொருட்களுடன் கடத்தப்பட்ட இரு லாரிகளை சம்பத் பாலின் குழுவினர் மடக்கி போலீசுக்கு போன் செய்துள்ளார்கள். இதைக் கண்டு கொள்ளாத போலீசாரை விட, நன்றியுடைய நாய்களே மேல் என்பதை சுட்டிக் காட்ட விரும்பி இருக்கிறார்கள். இதற்காக, சுமார் நூறு நாய்களுடன் காவல் நிலையத்தை நோக்கி ஒரு ஊர்வலம் நடத்தினார் சம்பத்பால். அதன் பிறகு ரேஷன் திருடர்கள் பிடிக்கப்பட்டனர்.
இதன் பிறகு மக்கள் அழைத்த 'குலாபி கேங்' என்ற பெயரையே அவர்களின் பெயராக 2003-ல் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குழுவின் கிளைகள் அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவி புந்திகண்ட் முழுவதும் விரிந்தது. தற்போது குலாபி கேங்கில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய சம்பத் பால் கூறுகையில், 'இதன் பிறகு, எனது மாமியார் வீட்டாரும் என்னை மருமகளாக அடைய பெருமை கொள்வதாக கூறி ஏற்றுக் கொண்டனர். சிலசமயம் போலீஸ் மற்றும் அதிகாரிகள் மீது கைகளை ஓங்கவும் நாம் தயங்குவதில்லை. குலாபி கேங்கின் கம்புகள், பெண்களை டார்ச்சர் செய்பவர்களை பதம் பார்க்கவும் தவறுவதில்லை. இதன் காரணமாக ஒருமுறை ஒருசில நாட்களுக்காக ஜெயிலுக்கும் செல்ல வேண்டியதாயிற்று. மேலும் எங்கள் மீது பதிவான சில வழக்குகளில் ஆதாரம் இல்லை என தள்ளுபடியும் ஆகி உள்ளது' எனக் கூறுகிறார்.
ஒரு முறை பாந்தா வந்த உ.பி.யின் ஒரு ஐஜி, குலாபி கேங்கை நக்சலைட்டுகள் எனக் கூறிவிட்டார். இதை எதிர்த்து அந்தப் பகுதியில் கிளம்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக மறுநாளே மாநிலத்தின் ஏடிஜிபி, தம் ஐஜி கூறியது தவறு எனக் கண்டித்து வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று. காதலை ஆதரிக்கும் சம்பத் பால் இதுவரை, காதலித்து கைவிட முயன்ற இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மிரட்டி பணிய வைத்து ஒன்று சேர்த்து வைத்திருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டால், 'நக்சலைட்டுகள் என்ன செய்கிறார்கள் என எனக்கு தெரியாது. ஆனால், நாம் சிலசமயம் உரிமைகளை தட்டி பறிக்கத் தடியும் தேவைப்படுகிறது. அதற்காக என்னை நக்சலைட்டுகள் என அரசு கூறினால் எனக்கு கவலை இல்லை.' என சிரித்தபடி கூறும் சம்பத் பால், பல முற்போக்கான கருத்துக்களையும் புண்தில்கண்ட் கிராமத்தினரிடம் பரப்பி வருகிறார். பெண்கள் முகத்தை மறைக்கும் அளவுக்கு முக்காடு போடத் தேவையில்லை. பள்ளிக்கு செல்லாத பெண்களின் வாழ்வில் விடியல் வராது. இதற்கு முக்கிய ஆயுதமாக இருப்பது அவர் பெண்களிடையே சென்று பாடும் பாடல்கள். இவை படிப்பறிவு இல்லாத பெண்களின் கவனத்தை மிக எளிதாகக் கவர்ந்து விடுகிறது.
உ.பி.யின் பஞ்சாயத்து தேர்தலில், குலாபி கேங் சார்பாக போட்டியிட்ட 23 பேர்களில் சம்பத் பாலின் மகன் உட்பட 21 பேர் வென்றுள்ளனர். இதை தொடர்ந்து, பல அரசியல் கட்சிகளால் வீசப்பட்ட வலையில் காங்கிரசிடம் சிக்கினார் சம்பத் பால். கடந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சம்பத் பால் வெற்றி பெறவில்லை என்றாலும், கணிசமான வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, வரும் மக்களைவைத் தேர்தலிலும் காங்கிரசுக்காக போட்டியிட தயாராக இருக்கிறார்.
இந்த குலாபி கேங்கை பற்றி பிரான்சிலிருந்து வந்த ஒரு எழுத்தாளர் சம்பத் பாலின் சேவைகளை நூலாக எழுதி பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளார். லண்டனில் இந்த கேங்கை பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து வெளியிடப்பட்டு பல விருதுகளையும் வென்றுள்ளது.
இவ்வாறு, உலகம் முழுவதும் பரவிய சம்பத் பாலின் 'குலாபி கேங்' படமாக வெளிவந்துவிட்டது. ஆனால், இவரது உண்மைக் கதையல்ல என்ற அறிவிப்புடன் படம் துவங்குவதுதான் பெரிய சோகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT