Published : 30 Mar 2017 06:51 PM
Last Updated : 30 Mar 2017 06:51 PM

நடிகை சங்கீதா சட்டர்ஜியை கைது செய்ய வீடு வீடாக பால் பாக்கெட், செய்தித்தாள் போட்ட ஆந்திர போலீஸார்

செம்மரக் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட முன்னாள் நடிகை சங்கீதா சட்டர்ஜியை கொல்கத்தாவில் கைது செய்ய, ஆந்திர போலீஸார் அங்கு வீடு வீடாக பால் பாக்கெட், செய்திதாள்களை போட்டுள்ளனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் கர்னூல் உட்பட 6 மாவட்டங்களில் இருந்து சீனா, ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் செம்மரங்களை கடத்தியவர் லட்சுமணன். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஆதலால் இவரை கைது செய்தால் பல கடத்தல்காரர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் என்பதால், இவரை ஆந்திர போலீஸார் கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடத்தியில் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து சீனா, நேபாளம், ஜப்பான் நாடுகளை சேர்ந்த பலரை ஆந்திர போலீஸார் கைது செய்து, பதுக்கி வைத்திருந்த செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், லட்சுமணனின் ருசிகரமான காதல் கதையும் போலீஸாருக்கு தெரியவந்தது. இவர் கடத்தல் விஷயமாக அடிக்கடி கொல்கொத்தாவிற்கு விமானத்தில் பறந்துள்ளார். அப்போது ஒரு தனியார் விமான நிறுவத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த முன்னாள் நடிகை சங்கீதா சட்டர்ஜி (26) யுடன் பழக்கம் ஏற்பட்டது.

தினமும் 2 வேளை கொல்கொத்தாவிற்கு விமானத்தில் லட்சுமணன் பயணம் செய்ததால், இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உருவானது. இதன் பின்னர் இவர்களது 'நட்பு' காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து லட்சுமணனுக்கு சங்கீதா சட்டர்ஜி 2வது மனைவியானார். அவரது தொழிலிலும் சங்கீதா ஈடுபாடு கொண்டார். செம்மர கடத்தலில் பணப்பட்டுவாடா செய்வது, ஹவாலா பணத்தை மாற்றுவது, போலி துப்பாக்கி லைசென்ஸ் வழங்குவது உள்ளிட்ட பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனை அறிந்த ஆந்திர போலீஸார், சங்கீதாவை கைது செய்ய கொல்கொத்தாவிற்கு சென்றனர். ஒருமுறை கைது செய்த போது, அடுத்த 5 நிமிடங்களில் 10க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கீதா சார்பில் கொல்கொத்தா நீதிமன்றத்தில் ஆஜராகி அவருக்கு ஜாமீன் பெற்று தந்துள்ளனர். இதேபோன்று ஆந்திர போலீஸார் கைது செய்ய முயன்ற போதெல்லாம் அவர் தனது செல்வாக்கை உபயோகித்து தப்பி உள்ளார். சங்கீதாவை கைது செய்ய வாரண்ட்டுடன் சென்று கொல்கொத்தா நீதிமன்றத்தை நாடிய ஆந்திர போலீஸார், அவரை கைது செய்ய திட்டமிட்டனர்.

ஆந்திர நீதிமன்றமும் சங்கீதாவிற்கு பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக காத்திருந்த ஆந்திர போலீஸார் 3 குழுக்களாக கடந்த 20 நாட்களுக்கு முன் கொல்கொத்தா சென்றனர். அப்போது சங்கீதா தனது வீட்டை மாற்றி விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல், நட்சத்திர ஓட்டல்கள், பார்கள், ஷாப்பிங் மால்கள் என உயர்மட்ட மக்கள் நடமாடும் இடங்களில் ரகசியமாக கண்காணித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் இடங்களில் காலை வேளைகளில் பால் பாக்கெட், செய்தித்தாள் போட்டும் கண்காணித்துள்ளனர். அப்போது சங்கீதாவின் இருப்பிடம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சங்கீதா கடந்த செவ்வாய்க்கிழமை ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அன்றிரவே அவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாகாலா நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதின்பேரில், சித்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர் சித்தூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்தகட்டமாக சங்கீதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. அப்போது பல தகவல்கள் வெளியாகலாமென கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x